மாவட்ட செய்திகள்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே மினி பஸ்களை இயக்க வேண்டும் டிரைவர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை + "||" + Only on the approved route You have to run mini buses

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே மினி பஸ்களை இயக்க வேண்டும் டிரைவர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே மினி பஸ்களை இயக்க வேண்டும் டிரைவர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊட்டி,

நீலகிரி, கன்னியாகுமரி, சென்னை ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த அனைத்து தனியார் பஸ்களும் கடந்த 1972–ம் ஆண்டு முதல் அரசுடைமை ஆக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 341–க்கு மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள் ஊட்டி–1, ஊட்டி–2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம்–2 ஆகிய 6 டெப்போக்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. ஊட்டியில் இருந்து மஞ்சூர், கிண்ணக்கொரை, அப்பர்பவானி, கூக்கல்தொரை, கடநாடு, அத்திக்கல், சோலூர் தட்டனேரி, கோக்கால், கீழ்கோத்தகிரி உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கும் வழித்தடங்களை தவிர செல்ல முடியாத கிராமப்புற பகுதிகளுக்கு தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. நீலகிரியில் ஊட்டி–தலைகுந்தா, ஊட்டி–கேத்தி, கேத்தி–சாந்தூர், குன்னூர்–ஜெகதளா மற்றும் வண்டிச்சோலை, கோத்தகிரி–கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு 100–க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் உரிய வழித்தடத்தில் இயக்கப்படாமலும், அதிகமாக மக்களை ஏற்றியும், ஆபாச பாடல்களை ஒலிபரப்பியும் செல்வதாக மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு புகார்கள் வந்தன.

அந்த புகாரின் அடிப்படையில் மோட்டார் வாகன ஆய்வாளர்(அமலாக்கம்) நல்லதம்பி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நேற்று ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் மினி பஸ்களை தடுத்து நிறுத்தி ஆய்வு நடத்தினர். சோதனையில் மினி பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. தொடர்ந்து பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பஸ்களில் முதலுதவி பெட்டி இருக்கிறதா?, வழித்தட வரைபடம், வந்து செல்லும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளதா?, டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா?, டிரைவருக்கு பெரிய வாகனங்களை இயக்க பேட்ஜ் வழங்கப்பட்டு உள்ளதா? போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்(அமலாக்கம்) நல்லதம்பி கூறியதாவது:–

ஊட்டியில் நடந்த வாகன சோதனையில் 10 மினி பஸ்களில் இருந்து ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக டிரைவர், கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக முதலுதவி பெட்டி வைப்பதோடு, பஸ் செல்லும் வழித்தடம் குறித்த வரைபடம் மற்றும் அதன் நேரம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அதிவேகத்தில் மினி பஸ்களை இயக்கக்கூடாது. அதிகமான மக்களை ஏற்றி செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே மினி பஸ்களை இயக்க வேண்டும். மற்ற இடங்களில் இயக்கக்கூடாது.

பஸ்சின் பின்பக்க கண்ணாடியை துணி போட்டு மறைக்கக்கூடாது. டிரைவரின் அருகில் பெண்களை அமர வைக்கக்கூடாது. அதிக ஒலி எழுப்பும் வகையிலும், இரட்டை அர்த்தம் உள்ள பாடல்களை ஒலிபரப்பக்கூடாது. ஊட்டி அருகே தலைகுந்தா, எல்லநள்ளி, காட்டேரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் மினி பஸ்களிலும் சோதனை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

ஊட்டி–தலைகுந்தா இடையே மக்களுக்காக இயக்கப்பட்ட நகர பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி–கேத்தி–குன்னூர் இடையே இயக்கப்பட்டு வந்த நகர பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது ஊட்டி–காந்தல் வழித்தடத்தில் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பள்ளி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் பஸ்களில் நெரிசலுடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஊட்டி–மஞ்சூர் மற்றும் கூடலூர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும். ஊட்டி–குன்னூர் இடையே சாதாரண கட்டணத்தில் பஸ்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.