மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடி, உதை - 4 பேர் கைது + "||" + Plus-1 student was put on the pole and kicking and kicking - 4 arrested

பிளஸ்-1 மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடி, உதை - 4 பேர் கைது

பிளஸ்-1 மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடி, உதை - 4 பேர் கைது
ஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, உதைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள கோணாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவனும், பட்டுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவனும் மாதனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் கோணாம்பட்டியை சேர்ந்த மாணவன் பள்ளியில் தனது உறவுக்கார பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பட்டுவாம்பட்டியை சேர்ந்த மாணவனும், அவரது நண்பர்களும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பினரும் பள்ளிக்கூடத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு தகராறு செய்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை எச்சரித்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனிடையே கோணாம்பட்டியை சேர்ந்த மாணவன் பட்டுவாம்பட்டி கிராமத்தின் வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது மற்றொரு மாணவன் தரப்பை சேர்ந்த சிலர் மாணவனை வழிமறித்து அடித்து, உதைத்து அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

இதனை அறிந்த மாணவனின் நண்பர்களும், உறவினர்களும் விரைந்து வந்து மாணவனை மீட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மாணவன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து படுகாயம் அடைந்த மாணவன் தரப்பில் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைசாமி (46), கீதா (45), சிங்காரம் (57), முனிராஜ் (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் மற்றொரு மாணவன் தரப்பில் அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பள்ளி மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பள்ளி வளாகத்தில் இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...