மாவட்ட செய்திகள்

சாம்சங் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர் + "||" + Samsung Smart Refrigator

சாம்சங் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்

சாம்சங் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்
சமையலறையில் மிகவும் உதவியாக இருக்கும் ரெப்ரிஜிரேட்டரிலும் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது, கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம்.
வழக்கமாக ரெப்ரிஜிரேட்டர் வீடுகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் முன்தினம் மிஞ்சி போன உணவுப் பொருட்களை பாதுகாக்க வைக்கப்படுகின்றன. பெரும் பாலான வீடுகளில் இதுதான் நிலை. சில வீடுகளில் இரண்டு கதவுகள் கொண்ட ரெப்ரிஜிரேட்டரை பயன்படுத்துகின்றனர்.

இது மின்னணு யுகம். வீடுகளில் ஸ்மார்ட்போன் புழக்கத்திற்கு வந்தபிறகு அனைத்துமே மின்னணு மயமாகி வருகிறது. ஸ்மார்ட்போன் மூலம் வீட்டில் உள்ள விளக்குகளையும், ஏ.சி.யையும் நிர்வகிக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

இந்நிறுவனம் முழு குடும்பத்திற்குமான பேமிலி ஹப் 3.0 எனும் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.2.80 லட்சமாகும். விலைக்கு தகுந்தபடி இதன் செயல்பாடுகள் முன்னேறிய வகையில் உள்ளன.

பிரிட்ஜின் உள்ளே உள்ள பொருட்களை கதவைத் திறந்து பார்க்கவே தேவையில்லை. இதன் கதவில் 21 அங்குல திரை உள்ளது. பிரிட்ஜினுள் உள்ள கேமரா மூலம் பிரிட்ஜில் உள்ள பொருட்களை பார்க்கலாம். இதில் ‘பிக்ஸ்பி’ எனும் குரல்வழி செயல்பாடு உள்ளது. இதன் மூலம் பல்வேறு வசதிகளை பெறலாம். அதேபோல உங்களுடைய பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இந்த ‘பிக்ஸ்பி’ உதவும்.

ரெப்ரிஜிரேட்டரின் செயல்பாடுகளை வெறும் குரல் வழி உத்தரவுகள் மூலம் செயல்படுத்த முடியும். அதற்கு இந்த பிக்ஸ்பி உதவுகிறது.

பிரிட்ஜினுள் என்னென்ன பொருட்கள் உள்ளன, எவை தீரும் நிலையில் உள்ளன, எவற்றை உடனடியாக வாங்க வேண்டும், குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் விருப்பமான பொருட்கள் எந்த அளவில் உள்ளன... என அனைத்து விவரங்களையும் இதில் உள்ள தொடு திரை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல உள்ளே உள்ள உணவுப் பொருள் எத்தனை நாட்களில் கெட்டுப் போகும் போன்ற விவரத்தையும் தெரிவிக்கும். நான்கு கதவுகளைக் கொண்ட இந்த பிரிட்ஜில் ஒரு கதவில் தொடு திரையும், மற்றொன்றில் தண்ணீர் டிஸ்பென்ஸரும் உள்ளன.

அனைத்திற்கும் மேலாக இல்லத்தரசிகள் புதுப்புது வகை சமையலை செய்து பார்க்க சமையல் குறிப்புகளையும் இது வழங்கும். பிரபல செப்களின் சமையல் குறிப்புகளையும் இதில் பெறலாம்.

இதை ஸ்மார்ட்போனுடன் இணைத்து செயல்படுத்தலாம். இதனால் கடைக்குச் சென்றபிறகு பிரிட்ஜில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன, எவற்றை வாங்க வேண்டும் என்ற குழப்பம் நேரும்போது, நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் பிரிட்ஜின் உள்பகுதியை பார்க்க முடியும்.

வீட்டிலுள்ள டி.வி., ஹோம் தியேட்டர் உள்ளிட்டவற்றையும் ‘பிக்ஸ்பி’ மூலம் செயல்படுத்த முடியும்.

உங்கள் வீடும் ஸ்மார்ட் ஆக மாறுவதற்கு இந்த ஸ்மார்ட் பிரிட்ஜ் உதவும்.