மாவட்ட செய்திகள்

கிருஷ்ணா நதி கால்வாயில் ரூ.24 லட்சத்தில் தூர் வாரும் பணிகள், 15 நாட்களில் முடிக்க திட்டம் + "||" + The Krishna River canal is a workshop

கிருஷ்ணா நதி கால்வாயில் ரூ.24 லட்சத்தில் தூர் வாரும் பணிகள், 15 நாட்களில் முடிக்க திட்டம்

கிருஷ்ணா நதி கால்வாயில் ரூ.24 லட்சத்தில் தூர் வாரும் பணிகள், 15 நாட்களில் முடிக்க திட்டம்
கிருஷ்ணா நதி கால்வாயில் ரூ.24 லட்சம் செலவில் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 15 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டள்ளது.
சென்னை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தை வகுத்தது. அதன் பேரில் ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோமீட்டர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.

1984-ம் ஆண்டு கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1995-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு முதன்முதலில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஆண்டுக்கு 2 முறை விதம் தண்ணீர் திறக்கப்பட்டது. கண்டலேறு அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் 2-வது தவணையாக அதாவது ஜூலை மாதத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வில்லை.

இதனால் தற்போது கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் மழை நீர் தங்கு தடையின்றி பூண்டி ஏரியை சென்றடைய ஏதுவாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா நதி கால்வாயில் தூர் வார தமிழக அரசு ரூ.24 லட்சம் ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு தூர் வாரும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரதீஷ் மேற்பார்வையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளுடன் கால்வாய் கரையில் அடர்த்தியாக வளர்ந்த முள்புதர்களை அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. 15 நாட்களில் பணிகளை முடிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக பொதுப்பணித்தறை உதவி பொறியாளர் பிரதீஷ் தெரிவித்தார்.