கோவை,
வ.உ. சிதம்பரனார் பிறந்தநாளையொட்டி கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்தில் அவரது சிலை மற்றும் அவர் இழுத்த செக்கிற்கு இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
வ.உ.சி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கோவை மாநகரில் வ.உ.சி.க்கு சிலை வைக்க வேண்டும். மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த அறையை பராமரிப்பு செய்து அதனை நினைவு சின்னமாக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற விமானத்தில் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் மோதலில் ஈடுபட்ட சோபியா எனற பெண் முன்னதாகவே தமிழிசையுடன் விமானத்தில் பயணம் செய்வதாக டுவீட் செய்துள்ளார். விமானத்திற்குள் கோஷம் எழுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்பது அவருக்கு தெரியும். வேண்டுமென்றே இந்த செயலை அவர் செய்துள்ளார். எனவே தான் தமிழிசை சவுந்தரராஜன் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சோபியா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். ஏற்கனவே சோபியா மக்கள் அதிகாரம், மே 17 உள்ளிட்ட இயக்கங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இது போன்றவர்களுக்கு ஆதரவு தரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.