மாவட்ட செய்திகள்

திருத்தங்கல் பகுதியில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு, நகராட்சி ஆணையர் எச்சரிக்கை + "||" + Disconnect with water absorbing drinking water

திருத்தங்கல் பகுதியில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு, நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருத்தங்கல் பகுதியில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு, நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.

சிவகாசி,

திருத்தங்கல் நகராட்சி பகுதியில் 23 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இதில் 70 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். நகராட்சி சார்பில் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம், ஆணைக்குட்டம் மற்றும் பெரியகுளம் ஆகியவற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். ஆணைக்குட்டம் மற்றும் பெரியகுளத்தில் இருந்து வழங்கப்படும் தண்ணீர் வீட்டு புழக்கத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

வீட்டு புழக்கத்துக்கு தனி குழாய் அமைத்து தினமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் என ஒதுக்கி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீரான மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 13½ லட்சம் லிட்டர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி நகராட்சி பகுதியில் தற்போதைய நிலவரப்படி 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடக்கிறது. இந்த தண்ணீரை சிலர் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீராக தண்ணீர் கிடைக்காமல் இருக்கிறது. இது குறித்து பலர் நகராட்சி ஆணையரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் புகார் செய்தனர்.

இந்த நிலையில் நகராட்சி ஆணையர் சுவாமிநாதன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பல வீடுகளுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும் என்றும் ஆணையர் எச்சரித்தார்.

திருத்தங்கல் நகராட்சி பகுதிக்கு தினமும் 24 லட்சம் லிட்டர் தண்ணீர் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தான் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், அரசு அறிவித்தப்படி தண்ணீர் வழங்கினால் 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கலாம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.