மாவட்ட செய்திகள்

ஒருநாள் விடுப்பு எடுத்து கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + One day's demonstration was demonstrated by the village assistants

ஒருநாள் விடுப்பு எடுத்து கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஒருநாள் விடுப்பு எடுத்து கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம உதவியாளர்கள் தங்களின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் விடுப்பு எடுத்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 27-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
திருவண்ணாமலை,


தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் திருவண்ணாமலை வட்டத்தின் சார்பில் கிராம உதவியாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ரமணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ரவி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்துக்குச் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கே.பெருமாள் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஜமாபந்தி, இயற்கை இடர்பாட்டுக்குச் சிறப்புப் படி வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்குப் பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் கிராம உதவியாளர்களுக்குக் கடைசியாக பெறும் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் கஜேந்திரன் நன்றி கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர் நிருபர்களிடம் கூறுகையில், எங்களின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந்தேதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தோம். அடுத்த கட்டமாக இன்று (நேற்று) ஒருநாள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக வருகிற 27-ந்தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதில் மாவட்டத்தின் அனைத்துக் கிராம உதவியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர், என்றார்.