மாவட்ட செய்திகள்

சிலைகள் மாயம் வழக்கு எதிரொலி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு + "||" + Statues of magic in echo: Police IG in Srirangam Renganathar temple Ponmannakavel study

சிலைகள் மாயம் வழக்கு எதிரொலி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு

சிலைகள் மாயம் வழக்கு எதிரொலி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு
சிலைகள் மாயம் வழக்கை தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு நடத்தினார்.
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ நரசிம்மன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், “ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், கோவிலில் நூற்றுக்கணக்கான சிலைகள் மாயமாகி இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆய்வு நடத்தி, 6 வார காலத்துக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மாதம் 10-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில், 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று பகல் 1.45 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிழக்கு வெள்ளைகோபுரம் வழியாக சென்று ஆய்வு நடத்தினார்கள். அவர்களை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அர்ச்சகர் முரளிபட்டர் ஆகியோர் வரவேற்று, அழைத்துச்சென்று ஒவ்வொரு இடமாக காண்பித்தனர். பின்னர் 2.45 மணி அளவில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மற்றும் சில அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தனர்.

அவர்கள் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதியை பார்த்துவிட்டு, அந்த பிரகாரத்தில் உள்ள திருவரங்க அமுதனார் சன்னதியில் ஆய்வு செய்தனர். பின்னர் கருடாழ்வார் சன்னதி வழியாக மூலஸ்தானத்தில் ஆய்வு செய்துவிட்டு, அங்குள்ள கொடிக்கம்பம் அருகே ஆஞ்சநேயர் சன்னதியில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு மணல்வெளி வழியாக ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்தனர். அங்கு சிதிலமடைந்து இருந்த கற்சிலைகள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட பழங்கால பொருட்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்த இடங்களுக்கெல்லாம் சிலைகள் மாயமானதாக புகார் கொடுத்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜ நரசிம்மன் உடன் சென்றார். அவர் கோவிலில் எங்கு, எங்கெல்லாம் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் மாயமாகி உள்ளது என்பது பற்றியும் விளக்கி கூறிக்கொண்டே வந்தார். இது சம்பந்தமாக கோவில் இணைஆணையர் ஜெயராமனிடம் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விளக்கம் கேட்டார். அதற்கு அவர், ஐ.ஜி.யிடம் ஒவ்வொரு சிலைகளையும் சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துக்கொண்டே வந்தார். இந்த காட்சிகள் அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலில் மாற்றப்பட்டு இருந்த கதவுகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து ராமர் சன்னதியை பார்வையிட்டபிறகு, மீண்டும் சக்கரத்தாழ்வார் சன்னதி, கூரத்தாழ்வார் சன்னதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அதன்பிறகு அங்குள்ள தோட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு, விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் உள்ஆண்டாள் சன்னதி, வேணுகோபால் சன்னதிகளில் ஆய்வு நடைபெற்றது. நேற்று மாலை 4.45 மணி வரை, 3 மணிநேரம் இந்த ஆய்வு நடந்தது.

அதன்பிறகு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நிருபர்களிடம் கூறுகையில், “ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆய்வுப்பணிகளை தொடங்கி இருக்கிறோம். 25 சதவீத ஆய்வுப்பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் 75 சதவீத பணிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. 100 சதவீத ஆய்வையும் முடித்த பிறகு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வோம்” என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...