மாவட்ட செய்திகள்

மதுரை சிறைத்துறை சூப்பிரண்டுக்கு வாட்ஸ்-அப்பில் பகிரங்க மிரட்டல் விடுத்த ரவுடி + "||" + Superintendent of Prisons, issued a threat to the public in Madurai Rowdy Watts-Up

மதுரை சிறைத்துறை சூப்பிரண்டுக்கு வாட்ஸ்-அப்பில் பகிரங்க மிரட்டல் விடுத்த ரவுடி

மதுரை சிறைத்துறை சூப்பிரண்டுக்கு வாட்ஸ்-அப்பில் பகிரங்க மிரட்டல் விடுத்த ரவுடி
மதுரை மத்திய சிறைத்துறை சூப்பிரண்டுக்கு வாட்ஸ்-அப்பில் ரவுடி பகிரங்க மிரட்டல் விடுத்தார். கைதிகள் யாருக்காவது பிரச்சினை வந்தால் நடப்பதே வேறு என்று அவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை, 


மதுரை மத்திய சிறையில் சூப்பிரண்டாக இருப்பவர் ஊர்மிளா. இவரை ரவுடி ஒருவர் வாட்ஸ்-அப்பில் பகிரங்கமாக மிரட்டி பேசியிருக்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.
அதில் பேசியவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்த புல்லட் நாகராஜ். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் வாட்ஸ்-அப்பில் பேசியதாவது:-
புல்லட் நாகராஜ் பேசுறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண் முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடிச்சு கொன்றிருக்காங்க. மதுரை ஜெயிலை பொறுத்தவரை உங்களுக்கு நிர்வாகத் திறமை கிடையாது. சிறையில் கைதி மீது கை வைச்ச ஒரே காரணத்திற்காக ஜெயிலர் ஒருவரை எரிச்சு கொன்றது ஞாபகம் இருக்கும். ஏன் திருந்த மாட்டேங்கிறீங்க. நாங்க திருந்தி இப்ப பெரிய ஆளாக இருக்கோம். கைதிகள் யாருக்காவது பிரச்சினை வந்தால் நடப்பதே வேறு.

நீங்க சிறை காவலரு தான். போலீசுனு போடக்கூடாது. அப்படி போட்டா அடிச்சுடுவேன். அந்த பவர் எனக்கு இருக்கு. பெரிய, டி.ஜி.பி.க்கிட்ட எல்லாம் கேட்டு பாருங்க.. அவுங்க என்னை தொட்டு இருப்பாங் களா. ஜெயில்ல கஞ்சா வித்துக்கிட்டு தான் இருந்தேன். மதுரைல எனக்கு எல்லாம் கொடுத்துதான் ஆகணும். 10 செல்போன் வச்சிருந்தேன். என்னை தொட முடியுமா எவனாவது?
டாக்டர் அம்மாவ ‘வார்ன்’ பண்ணுங்க. பாவத்தின் சம்பளம் மரணம். கைதி காச திருடுறீங்க.. அவங்களே திருடனுங்க... அவனுங்க காச கொள்ளையடிக்கிற நீங்க தான் பயங்கரமான திருடங்க.

தர்மம் தான் ஜெயிக்கும். அதர்மத்திற்கு முதல்ல வெற்றி தான். தர்மம் நிதானமா அலுவல் செய்யும். ஆனா நிரந்தரமான சாதனை படைக்கும். எங்கிட்ட தர்மம் இருக்கு. டாக்டர் அம்மாவை ஒழுங்கா இருக்க சொல்லுங்க. போர்மேன் கஞ்சா இறக்குவான். ஆஸ்பத்திரில என்னென்ன களவு போகுதுன்னு தெரியாதா. என்கிட்ட எத்தனை லட்சம் வாங்கி இருப்பானுங்க தெரியுமா. என்னை எல்லாம் தொடவே மாட்டாங்க. கால் கிலோ கஞ்சா, அரைகிலோ கஞ்சானு இறக்கி இருக்கேன். முடிஞ்சா என் மேல ஆக்‌ஷன் எடுத்து பாரு.

இவ்வாறு மிரட்டல் விடுத்து பேசிஉள்ளார். அந்த ஆடியோ 7 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.

இதுகுறித்து மதுரை மத்திய சிறை வட்டாரத்தில் விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதில் புல்லட் நாகராஜின் அண்ணன் 2004-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தார். அப்போது அவர் தூக்க மாத்திரைகளை அதிகமாக வாங்கி சாப்பிட்டு போதை ஏற்றி கொள்வாராம். சில நாட்களுக்கு முன்பு அவரை பரிசோதனை செய்ய வந்த பெண் டாக்டரிடம் தனக்கு மருந்து அதிகமாக ஏற்றி ஊசி போடுமாறு கூறியுள்ளார். பெண் டாக்டர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர், சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளாவிடம் புகார் செய்தார். இதையடுத்து சூப்பிரண்டு, அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி அவர் நன்னடத்தை காரணம் காட்டி பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். பின்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஜெயிலில் நடந்தது குறித்து தம்பி புல்லட் நாகராஜிடம் தெரிவித்தார். இதைதொடர்ந்து அவர் சிறைத்துறை சூப்பிரண்டுக்கு வாட்ஸ்-அப்பில் ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்ததாகவும், மேலும் அவர் சிறை மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டருக்கும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. ரவுடி ஒருவர் தைரியமாக வாட்ஸ்-அப் மூலம் சிறைத்துறை சூப்பிரண்டுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆசிரியரின் தேர்வுகள்...