மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடுகள் விதிப்பு 5 கடற்கரை பகுதியில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் + "||" + Restrictions for celebrating Vinayagar Chaturthi festival

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடுகள் விதிப்பு 5 கடற்கரை பகுதியில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடுகள் விதிப்பு 5 கடற்கரை பகுதியில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் திருச்செந்தூர் உள்பட 5 கடற்கரை பகுதிகளில் மட்டுமே களிமண் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

விநாயகர் சதுர்த்தி

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். நமது கொண்டாட்டங்களினால் சுற்றுச்சூழல் குறிப்பாக நீர்நிலைகள் மாசுபடாமல் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

எனவே பொதுமக்கள் வருகின்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் வழிமுறைகளை பின்பற்றுவது நமது நீர் நிலைகள் மாசடைவதை தடுக்க மிகவும் உதவியாக அமையும். எனவே, வரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

விதிமுறைகள்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு சுடப்படாததாகவோ அல்லது கிழங்கு மாவு, ஜவ்வரிசி ஆலைகழிவுகள் போன்ற வேதிப்பொருட்கள் கலக்காத சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை கொண்டோ தயாரிக்கப்பட வேண்டும்.

இவற்றில் பூசப்படும் வர்ணங்கள் நீரில் கரையும் தன்மையுடையதாகவும், எவ்வித நச்சு தன்மையற்றதாகவும் இயற்கை வர்ணங்களை உடையதாகவும் இருத்தல் வேண்டும். நச்சுத்தன்மையுடைய மக்கும் தன்மையற்ற வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் வர்ணங்களை சிலைகளில் பயன்படுத்துதல் கூடாது.

சிலைகள் காவல் துறையினரால் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவப்பட வேண்டும். சிலை நிறுவப்பட்டுள்ள இடம் மற்றும் ஊர்வலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. மேலும் ஊர்வலம் மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது.

சிலைகள் அனுமதி அளிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும். சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் முன்பு அவற்றில் காணப்படும் பூக்கள், மாலை, இலை, துணி மற்றும் பிற ஆபரணங்கள் நீக்கப்பட வேண்டும். இவற்றில் மக்கும் பொருட்களை உரமாக்கி பயன்படுத்தலாம்.

5 கடற்கரை பகுதிகளில்...

விநாயகர் சிலைகளை முத்தையாபுரம் கடற்கரை, திரேஸ்புரம் கடற்கரை, திருச்செந்தூர் கடற்கரை, குலசேகரன்பட்டினம் கடற்கரை மற்றும் வேம்பார் கடற்கரை பகுதிகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.

விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் காணப்படும் தண்ணீரின் தரம் சிலைகள் கரைப்பதற்கு முன்னர், சிலைகள் கரைக்கப்படும் பொழுது மற்றும் சிலைகள் கரைக்கப்பட்ட பின்னர் என 3 நிலைகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன.

எனவே பொதுமக்கள் வழி முறைகளின் படி நீர்நிலைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் கரைத்து, விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.