மாவட்ட செய்திகள்

மாணவர் தற்கொலை: பொய்கை அரசு பள்ளியை உறவினர்கள் முற்றுகை - ஆசிரியருக்கு அடி-உதை + "||" + Student Suicidal: The Siege of the Lyceum School School Relatives - Step-By-Step

மாணவர் தற்கொலை: பொய்கை அரசு பள்ளியை உறவினர்கள் முற்றுகை - ஆசிரியருக்கு அடி-உதை

மாணவர் தற்கொலை: பொய்கை அரசு பள்ளியை உறவினர்கள் முற்றுகை - ஆசிரியருக்கு அடி-உதை
வேலூர் அருகே தற்கொலை செய்துகொண்ட மாணவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஆசிரியரை உறவினர்கள் அடித்து உதைத்தனர். மேலும் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,

வேலூரை அடுத்த பொய்கையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அப்துல்லாபுரம் சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அருண்பிரசாத் (வயது 17) இதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்தார்.

கடந்த 3-ந் தேதி காலையில் வழக்கம்போல பள்ளிக்கு சென்று திரும்பிய அருண்பிரசாத் அன்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவனின் புத்தகப் பையை, அவருடைய பெற்றோர் பார்த்துள்ளனர். அப்போது தற்கொலை செய்துகொண்ட மாணவர் அருண்பிரசாத் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அதில் 5 ஆசிரியர்கள் குறித்து எழுதியிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில் மாணவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆசிரியர்களில் ஒருவரான கண்ணப்பன் என்பவர் அங்கு நின்றுள்ளார். அவரை பார்த்ததும் மேலும் கொதிப்படைந்த உறவினர்கள் ஆசிரியர் கண்ணப்பனை அடித்து உதைத்து தாக்கி உள்ளனர்.

இதைப் பார்த்த மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர். அப்போது மற்றொரு ஆசிரியரை பாதுகாப்புக்காக ஒரு அறையில் வைத்து பூட்டினர். அந்த அறையின் பூட்டை உடைக்க முயன்றனர். மேலும் சில மாணவர்கள் அந்த அறைமீது கல்வீசி தாக்கினர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஆசிரியர் கண்ணப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போராட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்தனர்.

அதேநேரத்தில் இதுபற்றி தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் புலேந்திரன் ஆகியோரும் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவனின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு இதுகுறித்து விசாரணை நடத்தி ஆசிரியர்கள் மீது தவறு இருந்தால் அவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

தற்கொலை செய்துகொண்ட மாணவர் அருண்பிரசாத் எழுதிய கடிதம் காரணமாக நேற்று அவருடைய உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதோடு, ஆசிரியரையும் அடித்து உதைத்தனர். மாணவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது:-

பொய்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் கட்டாயம் வேதனைப்படுவார்கள். அதில் நான் குறிப்பிடுபவர் மட்டும். ரவிச்சந்திரன், கண்ணப்பன், வேதியியல் ஆசிரியர் குமார். இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களும்.

காரணம் எனக்கு பிடிக்காதவகையில் பாடம் நடத்தினார்கள். முக்கியமாக கண்ணப்பன் மாணவனுக்கு ஒரு சிறிய சூத்திரம் தெரியவில்லையென்றால் சொல்லிபுரியவைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவனை அடித்தால் மட்டும் அவனுக்கு புரிந்துவிடுமா?. அடுத்து குமார். தலைமை ஆசிரியர் கூறுவார் ஏன்?, எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை ஆசிரியரிடம் கேட்கவேண்டும் என்பார்.

ஆனால் எங்கள் வகுப்பறையில் அப்படி நடப்பதல்ல. அவர் கேள்வி கேட்பார். தெரியவில்லையென்றால் அடிப்பார். பி.டி. (உடற்கல்வி) ஆசிரியர், ஒருவனை தரக்குறைவாக பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இவர்கள் பேசுவார்கள். இவையனைத்தும் என் கைப்பட எழுதியது. இவ்வாறு மாணவர் எழுதியிருக்கிறார்.