மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை + "||" + Women's siege of municipal office with drinking water and asking for drinking water

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை, 


திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி வார்டு எண் 22-ல் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குடியிருப்புகளுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தினமும் தண்ணீருக்காக பகல், இரவு என அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வேதனைக்கு ஆளான மக்கள் இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆணையர் சுதா பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் போராட்டம் நடத்திய நாள் மட்டும் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் இதுவரை தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலை மணப்பாறை நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட அதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதாக இல்லை. ஆனால் போராட்டம் நடத்தினால் மட்டும் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைக்கின்றீர்கள். ஆகவே தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நகராட்சி ஆணையர் சுதா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அந்த பகுதியை பார்வையிட்டு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன் ஆழ்குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர் அந்த பகுதியை பார்வையிட சென்றதை தொடர்ந்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.