மாவட்ட செய்திகள்

தண்ணீர் திருட்டை தடுத்த ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் + "||" + Murder threat to the panchayat secretary who blocked water theft

தண்ணீர் திருட்டை தடுத்த ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல்

தண்ணீர் திருட்டை தடுத்த ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல்
தண்ணீர் திருட்டை தடுத்ததால் ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை,


கொடைக்கானல் தாலுகா பூலத்தூர் கிராமத்துக்கு குடிநீர் ஆதாரமாக வண்ணாந்துரை பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால் தான் அருகில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் இருக்கும். இந்தநிலையில் அந்த குளத்தில் உள்ள தண்ணீரை அதே பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் (வயது 68), அவருடைய மகன் பிரதீப்குமார் (34) ஆகியோர் மின் மோட்டார் மூலம் திருடி விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பூலத்தூர் ஊராட்சி செயலர் செந்தில் பாண்டியன், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜனிடம் (கிராம ஊராட்சி) புகார் கொடுத்தார். அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பூலத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் தண்ணீர் திருடிய 2 பேரையும் எச்சரிக்கை செய்தார்.

ஆனால் இதை பொருட்படுத்தாமல் தந்தையும், மகனும் தொடர்ந்து அந்த குளத்தில் இருந்து தண்ணீரை திருடி விவசாயம் செய்து வந்தனர். இதை பார்த்த ஊராட்சி செயலர் செந்தில் பாண்டியன், தண்ணீர் எடுக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துவிட்டு ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்மோகன், பிரதீப்குமார் ஆகியோர் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று செந்தில் பாண்டியனை தகாத வார்த்தையால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலர் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராஜ்மோகன், பிரதீப்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.