மாவட்ட செய்திகள்

எழுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் + "||" + The Human Rights Commission of the State is the chief editor of the school

எழுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

எழுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எழுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடலூர், 


திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியையாக திட்டக்குடியை சேர்ந்த அனுசுயா என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் சாதி பாகுபாடு பார்த்து ஒரு பிரிவு மாணவ-மாணவிகளை மட்டும் வகுப்பறையில் தனியாகவும், மற்ற பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளை தனியாகவும் அமர வைத்ததாக புகார் எழுந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி ஒரு பிரிவு மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்து, தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை அனுசுயா, தன்னுடன் வாக்குவாதம் செய்த ஒரு பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினார். பதிலுக்கு மற்ற பெண்கள் அவரை தாக்கினர். அப்போது ஒரு பெண் அனுசுயாவை செருப்பால் தாக்கினார். பதிலுக்கு அவரும் தன்னுடைய செருப்பால் அவர்களை தாக்கினார்.

இவை அனைத்தையும் ஒரு பெண் தன்னுடைய செல்போனில் படம் பிடித்து, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, தாசில்தார் சத்யன், விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி, சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, பள்ளி தலைமை ஆசிரியை அனுசுயாவை பணியிடை நீக்கம் செய்தார்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி மாநில மனித உரிமை ஆணைத்தில் அனுசுயா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் அனுசுயா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமியிடம் கேட்ட போது, ஏற்கனவே இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தலைமை ஆசிரியை அனுசுயா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது மாநில மனித உரிமை ஆணையமும் வழக்குப்பதிவு செய்து, அவரை விசாரணைக்காக நேரில் அழைத்து உள்ளது. இது பற்றிய விவரத்தை அவரிடம் தெரிவித்து விட்டோம். மாநில மனித உரிமை ஆணையத்தில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.