மாவட்ட செய்திகள்

நேர்மையான அதிகாரிகள், அரசுகளால் பந்தாடப்படுகின்றனர் - கர்நாடக போலீஸ் ஐ.ஜி. ரூபா பேட்டி + "||" + Honest officials are being held by governments - Karnataka police IG Rupa

நேர்மையான அதிகாரிகள், அரசுகளால் பந்தாடப்படுகின்றனர் - கர்நாடக போலீஸ் ஐ.ஜி. ரூபா பேட்டி

நேர்மையான அதிகாரிகள், அரசுகளால் பந்தாடப்படுகின்றனர் - கர்நாடக போலீஸ் ஐ.ஜி. ரூபா பேட்டி
ஊழலுக்கு எதிராக நாடுமுழுவதும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றும், நேர்மையான அதிகாரிகள் வளைந்து கொடுக்க மறுப்பதால் அரசுகளால் இடமாற்றம் செய்யப்பட்டு பந்தாடப்படுகிறார்கள் என்றும் கர்நாடக மாநில ஐ.ஜி. ரூபா கூறினார்.

கோவை,

அரசுப் பணியில் நேர்மையாக பணிபுரியும் அரசு ஊழியர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில் நேர்மையாக லஞ்சம் பெறாமல் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விருது வழங்கும் விழா கோவை வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு விழா அரங்கில் நேற்று நடந்தது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் பணி புரிந்து, பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஐ.பி.எஸ். அதிகாரியும் தற்போது ஆயுதப்படை ஐ.ஜி.யுமான ரூபா, நேர்மையான அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

மேலும், ஊழல் அதிகாரிகளை எதிர்த்து தைரியமாக புகார் கொடுத்த 10 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் ஐ.ஜி. ரூபா பேசும்போது கூறியதாவது:–

ஊழலுக்கு எதிராக இளம்தலைமுறையினர் போராட வேண்டும். அப்போதுதான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்று அனைத்துமட்டத்திலும் ஊழல் பெருகி உள்ளது. 176 ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 79–வது இடத்தில் உள்ளது. வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகளில் அதிக அளவு ஊழல் நடக்கிறது. ஹாங்காங்கில் ஊழல் மிக குறைவாக உள்ளது. 0.2 சதவீதம்தான் அங்கு ஊழல் உள்ளது. நேர்மையான அரசு நிர்வாகத்தினால்தான் நல்ல நிர்வாகத்தை கொடுக்க முடியும். ஊழல் அரசியல்வாதிகளை தேர்தல் மூலம் தேர்வு செய்தால் முறைகேடுகளைத்தான் செய்வார்கள். ஓட்டுக்கு பணம் கொடுத்து ஒருவர் வெற்றி பெற்றால் அவரிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும். ஊழல் எங்கும் புரையோடிவிட்டது. குப்பை அள்ளுவதில் தொடங்கி, மின் இணைப்பு, அரசு பணிகளுக்கான டெண்டர் என்று பலவற்றிலும் ஊழல் உள்ளது. ஊழல் மூலம் தரமற்ற சாலையை போட்டு அதனால் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? கமி‌ஷன் பெற்றுக்கொண்டு தரமற்ற பாலங்களை கட்டுவதால் இடிந்து விழும் நிலையும் உள்ளது.

நேர்மையான அதிகாரிகள் கொலை செய்யப்படுவது, இடமாற்றம் செய்யப்படுவது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சிறுவயது முதல் நேர்மையை ஒவ்வொரு பெற்றோரும் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல பலனை பெற முடியும். அனைத்து அரசு பணிகளும் ஆன்லைன் மூலம் கொண்டு வரப்பட்டாலும் அதிலும் முறைகேடு நடைபெறுகிறது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தயக்கம் காண்பிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஐ.ஜி. ரூபா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:–

ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் மாணவ–மாணவிகள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊழல் தொடர்பாக அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும். சமூக மாற்றத்திற்கு நேர்மையான அதிகாரிகளின் பங்கு நிச்சயம் இருக்கும்.

நேர்மையான அதிகாரிகளை அரசுகள் விரும்புவதில்லை. அவர்கள் வளைந்து கொடுக்காததால் பந்தாடப்படுகின்றனர். இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் நேர்மையான அதிகாரிகள் செயல்படுத்தும் பணிகள் தொடர்ச்சி இல்லாமல் அறுபட்டுவிடும் நிலை ஏற்படுகிறது. தமிழக காவல்துறை தலைவர் மீதான சி.பி.ஐ. நடவடிக்கை குறித்து நான் கருத்து கூற முடியாது. நான் வேறு மாநில அதிகாரியாக இருப்பதால் இதுகுறித்து பேசுவது முறையாக இருக்காது.

சிறையில் சசிகலா தொடர்பான வி‌ஷயங்களில் எனது பணியை மட்டும்தான் செய்தேன். ‘மன்னார்குடி மாபியா உங்களை சும்மா விடாது’ என்று கூட பலர் என்னிடம் கூறி மிரட்டினார்கள். அது பற்றி நான் கவலைப்படாமல் என் பணியை சரியாக செய்தேன். அவர்களது தரப்பில் இருந்து எந்த மிரட்டலும் வரவில்லை. பரப்பன அக்ரஹாரா சிறையில் தற்போது என்ன நிலைமை இருக்கின்றது என்பது குறித்து எனக்கு தெரியாது. எனது பணியிடமாற்றத்திற்கு பிறகு புதிதாக வந்த சிறை அதிகாரி, சிறையில் சசிகலா விதிமீறல் செய்தது தொடர்பான அறிக்கையை மேல் அதிகாரிகளிடம் சம்ர்ப்பித்ததாக கூறப்பட்டது. அந்த அறிக்கையை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் பெற முயற்சித்தும் என்னால் பெற முடியவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு அதிகாரிகள் பதில் கூற விரும்புவதில்லை. 5 கேள்விகள் கேட்டால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளித்துவிட்டு, மற்ற 4 கேள்விகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்குமாறு கூறி நழுவிவிடும் போக்கை அதிகாரிகள் கடைபிடிக்கிறார்கள். சிறையில் எனது நடவடிக்கை தொடர்பாக என்னை பணியிடமாற்றம் செய்தது குறித்து நான் எந்த கேள்வியையும் யாரிடமும் எழுப்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.