மாவட்ட செய்திகள்

கும்பகோணம் அருகே சரக்கு ரெயிலை நடுவழியில் நிறுத்தி விட்டு சென்ற டிரைவர் + "||" + Near Kumbakonam Freight Rail Stay in the middle The last driver

கும்பகோணம் அருகே சரக்கு ரெயிலை நடுவழியில் நிறுத்தி விட்டு சென்ற டிரைவர்

கும்பகோணம் அருகே சரக்கு ரெயிலை நடுவழியில் நிறுத்தி விட்டு சென்ற டிரைவர்
பணிநேரம் முடிந்து விட்டது என கூறி கும்பகோணம் அருகே சரக்கு ரெயிலை என்ஜின் டிரைவர், நடுவழியில் நிறுத்தி விட்டு சென்றார். ரெயில்வே கேட் மூடப்பட்டதால் 13½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டது. கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள மாதுளம்பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் சென்றதும் அந்த சரக்கு ரெயில் திடீரென நிறுத்தப்பட்டது.

இதனால் மாதுளம்பேட்டை ரெயில்வே கேட் உடனடியாக மூடப்பட்டது. இந்த நிலையில் சரக்கு ரெயில் என்ஜினின் டிரைவர், தனது உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தனக்கு பணி நேரம் முடிந்து விட்டதாகவும், அடுத்த “ஷிப்டுக்கான” டிரைவர் வரவில்லை என்றும், தனது பணி நேரத்தை விட இதுவரை கூடுதலாக வேலை பார்த்து விட்டேன் என்றும், சரக்கு ரெயில் என்ஜினை இயக்க வேறு டிரைவரை அனுப்பும்படியும் கூறினார்.

அப்போது உயர் அதிகாரிகள் அந்த டிரைவரிடம், தஞ்சை வரை ரெயிலை ஓட்டிச்செல்லுங்கள், அங்கு மாற்று டிரைவர் வந்து விடுவார் என கூறியுள்ளனர். ஆனால், அதிகாரிகளின் பதிலை ஏற்காத டிரைவர், சரக்கு ரெயிலை மாதுளம்பேட்டை ரெயில்வே கேட்டிலேயே நடுவழியில் நிறுத்தி விட்டு ரெயிலில் இருந்து இறங்கி சென்று விட்டார்.

மாதுளம்பேட்டை ரெயில்வே கேட்டில் இருந்து கும்பகோணம் ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடை வரை சரக்கு ரெயிலின் பெட்டிகள் நீண்டிருந்தன. இதன் காரணமாக கும்பகோணம் ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு வர வேண்டிய பயணிகள் ரெயில்கள், 1-வது மற்றும் 2-வது நடைமேடைக்கு வரவழைக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனர்.

சரக்கு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் மாதுளம்பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கும்பகோணத்தில் இருந்து சாக்கோட்டை, நாச்சியார்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாதுளம்பேட்டை ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் 4 கிலோ மீட்டர் சுற்றி வந்து கும்பகோணம் மேம்பாலம் வழியாக மாற்றுப்பாதையில் சென்றன.

நடந்து சென்றவர்கள், சரக்கு ரெயிலின் பெட்டிகளுக்கு இடையே நுழைந்து கடும் சிரமத்துடன் ரெயில்வே கேட்டை கடந்து சென்றனர். சைக்கிளில் சென்றவர்கள் தண்டவாளத்திலேயே ஆபத்தான முறையில் சைக்கிளுடன் சரக்கு ரெயிலை சுற்றி வந்து ரெயில்வே கேட்டை கடந்து சென்றனர்.

மாலை 4.30 மணிக்கு மாற்று டிரைவர் வந்ததை தொடர்ந்து அந்த சரக்கு ரெயில் மாதுளம்பேட்டை ரெயில்வே கேட்டில் இருந்து புறப்பட்டு சென்றது.

மாதுளம்பேட்டை ரெயில்வே கேட்டில் அதிகாலை 3 மணி அளவில் நிறுத்தப்பட்ட சரக்கு ரெயில் மாலை 4.30 வரை அங்கேயே நின்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் 13½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சரக்கு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.