மாவட்ட செய்திகள்

தரமான இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பேன் - கவர்னர் கிரண்பெடி உறுதி + "||" + Quality free rice will take action

தரமான இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பேன் - கவர்னர் கிரண்பெடி உறுதி

தரமான இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பேன் - கவர்னர் கிரண்பெடி உறுதி
மாதந்தோறும் தரமான இலவச அரிசி வழங்க, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரவையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேன் என்று, கவர்னர் கிரண்பெடி கூறினார்.
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நேற்று காலை கவர்னர் கிரண்பெடி வருகை தந்தார். அப்போது அவர் திருநள்ளாறு அகலங்கண்ணு தடுப்பு அணையை ஆய்வுசெய்தார். பின்னர், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைகளை மேடையில் பேசவிட்டு கேட்டறிந்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் கேசவன், பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மக்கள் பேசுகையில், கடந்த பல மாதங்களாக மாதாந்திர இலவச அரிசி கிடைக்கவில்லை. விவசாயமும் இல்லை. இதனால் மக்கள் உணவுக்கு வெகுவாக பாதித்து வருகிறோம். எனவே, முதல் வேலையாக இலவச அரிசி குளறுபடியை தீர்த்து வைக்கவேண்டும். என்றனர்.

விவசாயிகள் பேசுகையில், கர்நாடகாவிலிருந்து அதிகப்படியான காவிரி நீர் தமிழகத்திற்கு வந்தும், கடைமடை பகுதியான காரைக்காலுக்கு போதுமான தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை உறுதி திட்டம் அனைத்து பகுதிகளிலும் வழங்கவில்லை. விவசாயிகளின் குறைகளை அதிகாரிகள் காது கொடுத்து கேட்க வேண்டும். என்றனர்.

பின்னர், கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

ஆண்டுதோறும் அரசு ஒவ்வொரு துறைக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் இலவச அரிசி திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இலவச அரிசிக்கான நிதி ஒதுக்கீடு செய்தாலும், துறைரீதியாக சில பிரச்சினைகள் உள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி தரமாக இருக்கவேண்டும் என்பதில் நான் உறுதியுடன் உள்ளேன். அந்த வகையில் மக்களுக்காக அண்மையில் வாங்கப்பட்ட இலவச அரிசி தரமற்றதாக இருந்தது. அதை உரிய நேரத்தில் ஆய்வு செய்து, அதை திருப்பி அனுப்பி, மீண்டும் நல்ல அரிசியை வழங்கவேண்டும் என உத்தரவு வழங்கினேன்.

மீண்டும் நல்ல தரமான அரிசி வரவழைக்க சிறிது கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. இனி மாதந்தோறும் தரமான இலவச அரிசி வழங்க, முதல்வர் மற்றும் அமைச்சரவையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேன். அதேபோல், அடுத்து 100 நாள் வேலை உறுதி திட்டம், இனி எங்கெல்லாம் வழங்கவேண்டுமோ அங்கெல்லாம் வழங்க சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளுடன் பேசி வேலை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

மேலும், இங்கு ஏராளமான விவசாயிகள் பலதரப்பட்ட குறைகளை கூறியுள்ளர்கள். குறைகளை கூட யாரும் கேட்பதில்லை என வருத்தப்பட்டீர்கள். இனி மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தொடர்பான குறை கேட்கும் கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்தில், வேளாண்துறை அமைச்சர், வேளாண் இயக்குனர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இருப்பார்கள், அங்கு உங்கள் குறைகளை கூறுங்கள். தீர்வு கிடைக்காவிட்டால், வெள்ளிக்கிழமைகள் தோறும் நான் காணொலிக்காட்சி மூலம் குறைகளை கேட்டு வருகிறேன். அங்கே வந்து கூறுங்கள்.

முக்கியமாக அரசிடம் கணக்கில்லாத பணம் உள்ளது என யாரும் நினைக்கவேண்டாம். நமது வீடு போலதான் அரசும். வரவுக்கு ஏற்பதான் செலவு செய்யவேண்டும். நிதிக்கு ஏற்பதான் அரசும் செலவு செய்தாகவேண்டும். அரசு வழங்கும் இலவசங் களை பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அதாவது அரசின் பணம் கள், சாரயம், மது என குடித்து வீணடித்து வருகிறீர்கள். இதனால் நமது குடும்பம் பலவித இன்னலுக்கு ஆளாகிவருகிற்து.

குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடைகளால் ஏராளமான பிரச்சினைகள் வருகிறது. அதை உடனே அங்கிருந்து அகற்றவேண்டும். என மக்கள் ஒன்று கூடி மனு கொடுத்தால் அந்த மதுக்கடையை அகற்ற சட்டத்தில் இடம் உண்டு. குடித்து நோயாளியாகும் மக்களுக்கு அரசு மீண்டும் சிகிச்சைக்காக‘ செலவு செய்யும் நிலை உள்ளது.

சமூக மாற்றம் வேண்டுமென்றால் மக்கள் மதுவிற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். அதேபோல், அரசின் இலவசங்களை மட்டும் நம்பி மக்கள் இல்லாமல், சொந்தமாக உழைக்க அனைவரும் முன்வரவேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...