மாவட்ட செய்திகள்

வலம் வரும் சைக்கிள் பள்ளி + "||" + Crawl Coming Cycling school

வலம் வரும் சைக்கிள் பள்ளி

வலம் வரும் சைக்கிள் பள்ளி
சைக்கிளில் 23 ஆண்டுகளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏழை குழந்தைகளுக்கு கல்வி போதித்து வருகிறார், ஆதித்யாகுமார். 46 வயதாகும் இவரை குடும்பத்தினர் படிக்கவைக்கவில்லை.
சைக்கிளில் 23 ஆண்டுகளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏழை குழந்தைகளுக்கு கல்வி போதித்து வருகிறார், ஆதித்யாகுமார். 46 வயதாகும் இவரை குடும்பத்தினர் படிக்கவைக்கவில்லை. சிறுவயதிலேயே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் கூலி வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் படிப்பதற்கு விரும்பிய அவர் வீட்டை விட்டுவெளியேறி சாலையோரம் அனாதையாக திரிந்திருக்கிறார். ஆசிரியர் ஒருவர் அரவணைத்து பட்டப்படிப்பு வரை படிக்க வைத்திருக்கிறார்.

தன்னை போல் சிறுவயதில் யாருக்கும் கல்வி தடைப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் சைக்கிள் சவாரி செய்து கல்வி போதனையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். ஆதித்யா குமார் உத்தரபிரதேச மாநிலம் பரிதாபத் மாவட்டத்திலுள்ள சாலேம்பூர் கிராமத்தை சேர்ந்தவர். 1995-ம் ஆண்டு முதல் லக்னோவை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். எந்தவொரு பாடத்திட்டத்தையும், பள்ளிக்கூட புத்தகங்களையும் இவர் பயன்படுத்துவதில்லை. பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை சொல்லிக்கொடுத்துவருகிறார். அவை எளிய பயிற்சி முறைகளாக இருக்கின்றன. புத்தகங்கள் இல்லாமல் செயல்முறை விளக்கங்களுடன் சுலபமாக எழத, படிக்க பயிற்சி வழங்குவதால் ஏராளமான குழந்தைகள் ஆதித்யாகுமாரிடம் பாடம் கற்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு தொடக்கநிலை கல்வி வழங்கி பள்ளிப்படிப்பை தொடங்குவதற்கான தகுதியை வளர்க்கிறார்.

‘‘பள்ளிக்கூட வகுப்பறைகள் எப்படி இருக்கும் என்பது நான் கல்வி போதிக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தெரியாது. பள்ளிக்கூடம் ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கும் அவர்களால் சரியான காரணத்தை சொல்லமுடியாது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல விரும்புவதில்லை. அவர்களை சிறுவயதிலேயே தாங்கள் பார்க்கும் வேலைகளுக்கு பழக்கப்படுத்துவதே அதற்கு முக்கிய காரணம். எனது பெற்றோரும் என்னை அப்படித்தான் செய்தார்கள். நான் படிக்க விரும்பி வீட்டை விட்டு வெளியேறி லக்னோவுக்கு சென்றேன். எனக்கு ஆசிரியர் ஒருவர் நல்வழிகாட்டி பட்டதாரியாக மாற்றினார். அவர் எனக்கு வழங்கிய கல்வி சேவையை நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்படி பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன்’’ என்கிறார்.

ஆதித்யாகுமார், தினமும் 50 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். சைக்கிளில் ஏராளமான புத்தகங்களையும், கல்வி விழிப்புணர்வு பற்றிய பதாகைகளையும் வைத்திருக்கிறார். இந்த சேவைக்காக லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார்.