மாவட்ட செய்திகள்

கார் மோதி 2 பெண்கள் பலி + "||" + 2 women killed in car crash

கார் மோதி 2 பெண்கள் பலி

கார் மோதி 2 பெண்கள் பலி
விருத்தாசலம் அருகே கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருத்தாசலம், 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுநெமிலி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி ராணி(வயது 45). மாயவன் மனைவி அரசிளங்குமாரி(45), மண்ணாங்கட்டி(65).

கூலி தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் தினந்தோறும் காட்டுநெமிலியில் இருந்து பஸ் மூலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராம பஸ் நிறுத்தத்திற்கு வருவார்கள். பின்னர் அங்கிருந்து ஒரு லாரி மூலம் கூலி வேலைக்கு சென்று, மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

அதன்படி ராணி உள்பட 3 பேரும் நேற்று அதிகாலை 5 மணியளவில் பெரியவடவாடி பஸ் நிறுத்தம் வந்தனர். பின்னர் அவர்கள் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் அமர்ந்தபடி வழக்கமாக தங்களை அழைத்து செல்லும் லாரிக்காக காத்திருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, சாலையோரம் அமர்ந்திருந்த 3 பேர் மீதும் மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் ராணி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அரசிளங்குமாரி, மண்ணாங்கட்டி ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அரசிளங்குமாரி, மண்ணாங்கட்டி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரசிளங்குமாரி பரிதாபமாக இறந்தார். மண்ணாங்கட்டிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.