மாவட்ட செய்திகள்

போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியை “திடீர்” சாவு + "||" + The chief editor who was treated in police custody was "sudden" death

போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியை “திடீர்” சாவு

போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியை “திடீர்” சாவு
திருவாரூரில் ரூ.23½ லட்சம் மோசடி வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியை திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர், 


திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சுகிர்தராஜ். பூந்தோட்டத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி செல்வபாக்கிய செந்தில்குமாரி. இவர் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியை ஆவார்.

இவர்கள் 2 பேரும், சுகிர்தராஜிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளனர். அதை நம்பி சுகிர்தராஜ், முத்துராமலிங்கம், செல்வபாக்கிய செந்தில்குமாரி ஆகிய 2 பேரிடமும் ரூ.23½ லட்சத்தை கொடுத்தார். ஆனால் 2 பேரும் கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை.
இதைத்தொடர்ந்து சுகிர்தராஜ், பணத்தை திரும்ப கேட்டார். பணம் திரும்ப கிடைக்காத நிலையில், சுகிர்தராஜ் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துராமலிங்கம், அவருடைய மனைவி செல்வபாக்கிய செந்தில்குமாரி, அவருடைய உறவினர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி (வயது60), அவருடைய மகன் அருண் பாக்கியராஜ்குமார் ஆகிய 4 பேரும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23½ லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துராமலிங்கம் உள்பட 4 பேரை கைது செய்து திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 14-ந் தேதி வரை சிறையில் அடைக்க திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் முத்துராமலிங்கம், அருண் பாக்கியராஜ்குமார் ஆகியோரை திருச்சி மத்திய சிறையிலும், செல்வபாக்கிய செந்தில்குமாரி, சுப்புலட்சுமி ஆகிய 2 பேரையும் திருவாரூர் மகளிர் கிளை சிறையிலும் அடைப்பதற்காக போலீசார் வேனில் ஏற்றினர். அப்போது வேன் படிக் கட்டில் இருந்து சுப்புலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் சுப்புலட்சுமிக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சுப்புலட்சுமியை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் காவலுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது சுப்புலட்சுமி திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.23½ லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியை, அரசு மருத்துவமனையில் திடீரென இறந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.