மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் + "||" + The real estate agent kidnapped in motorcycle

மோட்டார்சைக்கிளில் சென்ற ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்

மோட்டார்சைக்கிளில் சென்ற ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்
திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை காரில் வந்த மர்மநபர்கள் பட்டப்பகலில் கடத்திய சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர், 

திருவாரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் நீதிமோகன் (வயது 52). இவர் நேற்று மதியம் தனது அலுவலக உதவியாளர் ராஜேந்திரனுடன் திருவாரூர் புதுத்தெருவில் இருந்து வடக்கு வீதியில் உள்ள தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பிடாரி கோவில் தெருவில் வந்தபோது அந்த வழியாக வேகமாக காரில் வந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, நீதிமோகனை மிரட்டி காரில் கடத்தி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு நீதிமோகனை கடத்தி சென்ற காரை போலீசார் தேடிவருகின்றனர்.

கடத்தப்பட்ட நீதிமோகன் மாத தவணையில் நிலம் வழங்குவதாக கூறி மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் நீதிமோகனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பாதிக்கபட்டவர்களால் கடத்தப்பட்டரா? அல்லது முன்விரோதமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்டு பலமணி நேரம் ஆன பிறகும் எந்த தகவலும் கடத்தல்காரர்களிடம் இருந்து வரவில்லை என்பதால் நீதிமோகன் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். திருவாரூரில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.