மாவட்ட செய்திகள்

பெங்களூரு உள்பட கர்நாடக மத்திய சிறைகளில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 79 கைதிகள் விடுதலை + "||" + On the basis of good conduct 79 prisoners are released

பெங்களூரு உள்பட கர்நாடக மத்திய சிறைகளில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 79 கைதிகள் விடுதலை

பெங்களூரு உள்பட கர்நாடக மத்திய சிறைகளில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 79 கைதிகள் விடுதலை
பெங்களூரு உள்பட கர்நாடக மத்திய சிறைகளில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் நேற்று 79 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
பெங்களூரு,

ஒவ்வொரு ஆண்டும், கர்நாடகத்தில் உள்ள மத்திய சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசு விடுதலை செய்து வருகிறது. ஒவ்வொரு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின்போது கைதிகள் சிறையில் இருந்து விடுதலையாவார்கள்.

கடந்த மாதம்(ஆகஸ்டு) சுதந்திரதினம் கொண்டாடப் பட்டது. முன்னதாக, சுதந்திர தினத்தையொட்டி நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய 105 கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலுக்கு மாநில அரசு அனுமதி அளித்த நிலையில் கவர்னர் வஜூபாய் வாலா 79 கைதிகளை விடுதலை செய்ய அங்கீகாரம் அளித்தார். இந்த அங்கீகாரம் காலதாமதமாக கிடைத்ததால் 79 கைதிகள் சுதந்திரதினத்தன்று விடுதலை செய்யப்படவில்லை.

மாறாக 79 கைதிகளும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து 28 கைதிகள், மைசூரு சிறையில் இருந்து 18 கைதிகள் பெலகாவி சிறையில் இருந்து 8 கைதிகள், கலபுரகி சிறையில் இருந்து 14 கைதிகள், விஜயாப்புரா சிறையில் இருந்து 4 கைதிகள், பல்லாரி சிறையில் இருந்து 5 கைதிகள், தார்வார் சிறையில் இருந்து 2 பேர் என்று மொத்தம் 79 கைதிகள் விடுதலை ஆனார்கள்.

முன்னதாக, பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் விடுதலையாகும் நிகழ்ச்சியை துணை முதல்-மந்திரியும், போலீஸ் துறை மந்திரியுமான பரமேஸ்வர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், விடுதலையாகும் கைதிகளுக்கு, விடுதலைக்கான சான்றிதழை பரமேஸ்வர் வழங்கினார். சிறையில் இருந்து வெளியே வந்த கைதிகளுக்கு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக்் ரோஜாப்பூ கொடுத்து வழியனுப்பினார். இந்த விழாவில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் வரவேற்றனர். கைதிகள் தங்களின் குடும்பத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்றனர். விடுதலையான கைதிகளை அவர்களின் பெற்றோர், மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் கட்டித்தழுவி ஒருவருக்கொருவர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

சில கைதிகளுக்கு அவருடைய குடும்பத்தினர் சிறை வளாகத்திலேயே திருஷ்டி சுற்றினர். முன்னதாக, பரப்பனஅக்ரஹாரா சிறையின் முன்புறம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.