மாவட்ட செய்திகள்

இன்று முழு அடைப்பு போராட்டம் : அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் + "||" + Today the whole shutdown struggle: the state buses will run as usual

இன்று முழு அடைப்பு போராட்டம் : அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும்

இன்று முழு அடைப்பு போராட்டம் : அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மும்பையில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடக்கிறது.
மும்பை,

அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும். ஆட்டோ, டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அறிவித்து உள்ளது. மும்பை, தானே, நவிமும்பை உள்பட மராட்டிய மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

மும்பையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தலைமையில் காங்கிரசார் பிரசாரம் செய்தனர்.

முழு அடைப்புக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்தது. இதேபோல நவநிர்மாண் சேனாவும் காங்கிரஸ் கட்சியின் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்தது.

இது தொடர்பாக அக்கட்சி தலைவர் ராஜ்தாக்கரே தெரிவிக்கையில், வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தாத பா.ஜனதா அரசு தூக்கி எறியப்பட வேண்டும். முழு அடைப்பு போராட்டத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையில் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி மட்டும் அல்லாமல் தேசியவாத காங்கிரஸ், நவநிர்மாண் சேனா, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

சிவசேனாவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதுகுறித்து தனிப்பட்ட முறையில் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவுத்திடம் பேசி இருக்கிறேன். வெளிப்படையாக விலை உயர்வை எதிர்த்து போராடுமாறு கூறியுள்ளேன். அவர்கள் பதிலுக்காக இதுவரை காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்பை, தானேயில் வியாபாரிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் இரு நகரங்களிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கும்.

மேலும் ஆட்டோ, டாக்சி யூனியன்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றன. இதன் காரணமாக டாக்சி, ஆட்டோக்களும் இன்று ஓடாது.

முழு அடைப்பு நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. மும்பை, தானேயில் மாநகராட்சி பஸ்களும் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரெயில் சேவை பாதிக்கப்படமால் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 

ஆசிரியரின் தேர்வுகள்...