மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம்: மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை + "||" + Petrol, diesel price hike strike to protest

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம்: மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம்: மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தால் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. திறந்திருந்த கடைகளை தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் அடைக்க வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தம் (பந்த்) நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வேலை நிறுத்தம் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. மாவட்டம் முழுவதும் அனைத்து பஸ்களும் வழக்கம்போல இயங்கின. சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரையிலும், அனைத்து வர்த்தக நிறுவனங்களும் வழக்கம் போல் திறந்து செயல்பட்டன. ஆட்டோக்கள், வேன் உள்ளிட்டவைகளும் எந்த தடையுமின்றி இயங்கின.

வழக்கமாக பந்த் அறிவிக்கப்பட்டால் மக்கள் வெளியில் வர தயங்கி வீட்டிலேயே இருந்து விடுவது வழக்கம். ஆனால் நேற்று நடைபெற்ற பந்த்தின் போது மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களின் அன்றாட பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததால், பந்த் சிறிய அளவில் கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

காங்கிரஸ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டிருந்ததையொட்டி நேற்று காலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, முன்னாள் நகரசபை கவுன்சிலர் அய்யனார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, நகர் தலைவர் கோபி, திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் மற்றும் தி.மு.க.வினர் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் திரண்டனர்.

இவர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டபடி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து துண்டு பிரசுரங்கள் வினியோகித்தனர். பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில் கடைகள் திறக்கப்பட்டிருந்ததால், அவர்கள் கடைகளை அடைக்கும்படி வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் சேர்ந்து செல்லக்கூடாது என்பது போன்ற விதிகளை விளக்கி கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மாவட்டம் முழுவதும் பந்த் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

போகலூர் யூனியன் சத்திரக்குடியில் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு வியாபாரிகளும், வாகன ஓட்டுனர்களும் ஆதரவளிக்கவில்லை. சத்திரக்குடியில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. ஆட்டோ உள்பட அனைத்து வாடகை வேன்களும் இயங்கின. மேலும் நேற்று வாரச்சந்தை என்பதால் அனைத்து கடைகளும் வழக்கம் போல செயல்பட்டன. அனைத்து ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை.

முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லை. அனைத்து கடைகளும் திறந்திருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. தி.மு.க., காங்கிரஸ், த.மு.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.