மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Petrol and diesel price hike Congress Party Demonstration

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. பேசியதாவது:–

சமவெளி பகுதிகளில் இருந்து கட்டுமான பொருட்கள், உணவு பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் நீலகிரிக்கு வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் 20 சதவீதம் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாதாரண மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் ஆதிவாசி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து தேயிலைத்தூள் ஏலம் எடுக்கப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் போது, வாடகை கட்டணம் உயர்கிறது.

இதேபோல் கிராமப்பகுதிகளில் சிறு, குறு தேயிலை விவசாயிகள் பறிக்கும் பச்சை தேயிலையை தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு வரும் வாகனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.ஆயிரம் வரை வாடகை உயர்வு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஏஜெண்ட்டுகள் குறைந்த விலையே வழங்க வேண்டிய நிலை உள்ளது. டீசல் விலை உயர்வால் நீலகிரியில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற விவசாயத்துக்கு தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தும் டீசல் மோட்டார்களை கையாளும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கும் டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மதசார்பற்ற ஜனதாள கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜரத்தினம், முன்னாள் நகர்மன்ற தலைவர் லலிதா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வின்சென்ட், நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.