மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியல்-தர்ணாவில் ஈடுபட்ட 759 பேர் கைது + "||" + The arrest of 759 people involved in road accidents - Darna denouncing petrol and diesel prices

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியல்-தர்ணாவில் ஈடுபட்ட 759 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியல்-தர்ணாவில் ஈடுபட்ட 759 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்ட 759 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல், 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் மற்றும் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி, திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் ஊர்வலம் நடந்தது.

இதில், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் மாட்டுவண்டியில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி வந்தனர். இந்த ஊர்வலம் பஸ்நிலையம், சப்- கலெக்டர் அலுவலக சாலை வழியாக தலைமை தபால் அலுவலகத்துக்கு வந்தடைந்தது. பின்னர், திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட பாலபாரதி உள்பட 80 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதற்கிடையே, திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கடைகளை அடைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஊர்வலம் நடத்தினர். பின்னர், அவர் தலைமையில் 15 பேர் சேர்ந்து எம்.ஜி.ஆர். சிலை முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். உடனே, அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
இதேபோல, கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அஜய்போஸ் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 20 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர்.

நத்தம் பஸ்நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சின்னகருப்பன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜு உள்பட 72 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, நத்தம் ரவுண்டானா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.வேடசந்தூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 40 பேர் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே, அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல கோவிலூரில் மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாணார்பட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வெள்ளைகண்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். கன்னிவாடி பஸ்நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 3 பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

குஜிலியம்பாறை அருகே உள்ள பாளையத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 33 பேர் கைது செய்யப்பட்டனர். அய்யம்பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 20 பேரையும், சித்தரேவில் பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 பேரையும் பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, பழனி பஸ் நிலையம், ஆயக்குடி, தொப்பம்பட்டியில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட பழனி நகர்மன்ற முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம் உள்பட 247 பேரை போலீசார் கைது செய்தனர். வடமதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 45 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்படி, நேற்று மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்ட 759 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

நிலக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கோகுல்நாத் தலைமையில் அந்த கட்சியினர் முக்கிய வீதிகளுக்கு சென்று கடைகளை அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று பெரும்பாலான வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை