மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலைமறியலில் ஈடுபட்ட 113 பேர் கைது + "||" + Petrol, Diesel price hike denies Demonstration In roadblock 113 arrests

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலைமறியலில் ஈடுபட்ட 113 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலைமறியலில் ஈடுபட்ட 113 பேர் கைது
நாகை, மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சாலைமறியலில் ஈடுபட்ட 113 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி நாகை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், நகர தலைவர் ரவிச்சந்திரன், மாநில பொதுகுழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயேந்திரன், பொறியாளர் அணியை சேர்ந்த செந்தில், நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி நாகூர் நகர தலைவர் அப்துல் காதர், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட நிர்வாககுழுவை சேர்ந்த சரபோஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 65 பேரை கைது செய்தனர்.

இதேபோல மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் முசாகுதீன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பு குழு தலைவர் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார். இதில் முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் சத்தியேந்திரன், ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக்அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க. நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் நன்றி கூறினார்.

வேதாரண்யம் தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் நாகை தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.கனகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், திமுக நகர செயலாளர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் கவிஞர் மாசி, குமரவேலு, காங்கிரஸ் நகர தலைவர் மூர்த்தி, செயல் தலைவர் வைரம், மகளிர் அணியினர், இளைஞர் காங்கிரசார் மற்றும் தொழிற்சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல வேதாரண்யம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று நாகை சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் நாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாவட்டக்குழு முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, வெற்றிவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 48 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. தினம் தினம் புதிய உச்சத்தை எட்டும் பெட்ரோல், டீசல் விலை :வாகன ஓட்டிகள் அவதி
பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை விழி பிதுங்க வைத்துள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சர்ச்சை கருத்து - மத்திய மந்திரி வருத்தம் தெரிவித்தார்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய மந்திரி வருத்தம் தெரிவித்தார்.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - பா.ஜனதா தலைவர் அமித்ஷா
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
5. பெட்ரோல், டீசலுக்கான வரிவிதிப்பினை 50 சதவீதம் குறைக்க வேண்டும் - விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கம் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு அதற்கான வரிவிதிப்பை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கம் கோரியுள்ளது.