மாவட்ட செய்திகள்

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு: சாலை மறியலில் ஈடுபட்ட 277 பேர் கைது + "||" + Petrol price hike: 277 people involved in the road blockade

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு: சாலை மறியலில் ஈடுபட்ட 277 பேர் கைது

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு: சாலை மறியலில் ஈடுபட்ட 277 பேர் கைது
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 277 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை,

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன.

திருவண்ணாமலையில் வழக்கம்போல அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டும் மூடப்பட்டு இருந்தது. மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள் ஓடாது என்று கூறப்பட்டது. ஆனால் ஆட்டோக்கள், கார்களும் ஓடின. இந்த கடையடைப்பு போராட்டத்தினால் திருவண்ணாமலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

அதேபோல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. ஆனால் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் இருந்தனர்.

மேலும் பெட்ரோல் -டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் 4 பெண்கள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆரணி வட்டத்தின் சார்பாக கட்சியினர் மாவட்ட நிர்வாகி சி.அப்பாசாமி தலைமையில் ஆரணி எம்.ஜி.ஆர். சிலை அருகே தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி நகர போலீசார் மறியலில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

வேட்டவலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் வாசுகி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் மாவட்டத்தில் 15 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 28 பெண்கள் உள்பட 277 பேர் கைது செய்யப்பட்டனர்.