மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி பாலியல் புகார்: பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் + "||" + College student sexually complained: Demonstration to prosecute the professors

கல்லூரி மாணவி பாலியல் புகார்: பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவி பாலியல் புகார்: பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகாரின்பேரில் பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார். மேலும் விடுதியில் காப்பாளர்களாக இருந்த 2 பெண் பேராசிரியைகள் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் கூறினார். இந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 2 பெண் பேராசிரியைகளும் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

அந்த மாணவிக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாணவிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் முத்துசெல்வம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய மாணவர் சங்க மாநில துணை செயலாளர் திலீபன், ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலன்டினா ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், பாலியல் புகாரில் சிக்கிய உதவி பேராசிரியர் மற்றும் 2 பேராசிரியைகள், கல்லூரி முதல்வர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து தொல்லைகள் கொடுப்பதை கண்டிப்பது, மாணவி அதே கல்லூரியில் படிக்க விடுதி வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.