மாவட்ட செய்திகள்

திருப்பூரில் மதுரை காதல் ஜோடி தற்கொலை + "||" + Madurai love romantic couple in Tirupur

திருப்பூரில் மதுரை காதல் ஜோடி தற்கொலை

திருப்பூரில் மதுரை காதல் ஜோடி தற்கொலை
திருப்பூரில் காதல்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பூர், 


மதுரை உசிலம்பட்டி கட்டத்தேவன்பட்டியை சேர்ந்தவர் தவமணி. இவர் குடும்பத்துடன் திருப்பூர் செரங்காடு சுப்பிரமணியன்நகர் 2-வது வீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவருடைய மகள் திவ்யா(வயது 22). இவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய உறவினரான மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முடுவார்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி(26) திருப்பூர் நல்லூர் அருகே உள்ள பொன்முத்து நகரில் உள்ள அவருடைய அக்கா வீட்டில் தங்கி இருந்து கார் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் என்பதாலும், அடிக்கடி சந்தித்து கொண்டதாலும் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இருவருக்கும் திருமணத்தை செய்து வைத்து விடலாம் என்று பெற்றோர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் எதிர்பாராதவிதமாக அருண்பாண்டியின் தந்தை சேதுபாண்டி திடீரென்று இறந்து விட்டார். இதனால் நேரம் சரியில்லை என்று இவர்களின் திருமணத்தை வருகிற தை மாதம் நடத்தலாம் என்று முடிவு செய்தனர். திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் காதல்ஜோடி மனவேதனை அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தவமணி தனது குடும்பத்துடன் புதுக்கோட்டையில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டார். இதனால் திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருப்பாள் என நினைத்து, அவரை அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கிக்கொள்ளுமாறு தவமணி கூறினார். இதையடுத்து திவ்யா உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு சிறிதுநேரம் இருந்துவிட்டு வெளியில் சென்று விட்டார்.

இந்தநிலையில் புதுக்கோட்டை சென்று இருந்த தவமணியும், அவருடைய குடும்பத்தினரும் நேற்று காலை திருப்பூர் வந்தனர். பின்னர் திவ்யாவை வீட்டிற்கு அழைத்து செல்ல அவரை தங்கி இருக்க சொன்ன உறவினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் திவ்யா வந்ததும் சிறிது நேரம் இருந்து விட்டு உடனே சென்று விட்டதாக தெரிவித்தனர். எனவே திவ்யா, அருண்பாண்டி தங்கி உள்ள வீட்டிற்கு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவர் தங்கியிருந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை நீண்டநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு திவ்யாவும், அருண்பாண்டியும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருப்பூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று அவர்கள் தற்கொலை செய்யும் முன்பு அந்த அறையில் கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளனரா? என தேடிப்பார்த்தனர். ஆனால் கடிதம் ஏதும் இல்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அருண்பாண்டி-திவ்யா திருமண பேச்சுவார்த்தை தொடங்கியபோது அருண்பாண்டியின் தந்தை இறந்து விட்டார். இதனால் நேரம் சரியில்லை என்று திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் திருமணம் தள்ளிப்போகுமோ? என்ற பயத்தில் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.