மாவட்ட செய்திகள்

தூய்மைக்கான விருது, அரசு பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு + "||" + Purity Award, Government school District Principal Appreciate the education officer

தூய்மைக்கான விருது, அரசு பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு

தூய்மைக்கான விருது, அரசு பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு
தூய்மை பள்ளிக்கான விருதினை தட்டிச்சென்ற தோ.செல்லாண்டி பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன் வாழ்த்து கூறி பாராட்டினார்.
கரூர்,

கரூர் அருகே திருமாநிலையூரை அடுத்த தோ.செல்லாண்டிபாளையம் எனும் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு வெறும் பாடங்களை மட்டும் நடத்திவிட்டு செல்லாமல், இங்குள்ள ஆசிரிய- ஆசிரியைகள் சுற்றுப்புற மேம்பாடு குறித்து எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்துகின்றனர். இதனால் சமூக அக்கறையுடன் செயல்பட்டு சுற்றுப்புறத்தூய்மை, கழிவறை பயன்பாடு, பிளாஸ்டிக் நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வினை அந்த மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை பள்ளியிலும் கடைபிடிக்கின்றனர். மேலும் பள்ளியின் வளாகத்தில் காய்கறி தோட்டம் வைக்கப்பட்டு கத்தரி, வெண்டை, சுரக்காய், பரங்கிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்டவை மாணவர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளே சத்துணவுக்கும் பயன்படுத்தப்படுவதால், மாணவர்களது ஆரோக்கியம் மேம்படு கிறது.

இத்தகைய செயல்பாடுகளால் தோ.செல்லாண்டி பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, தூய்மை பள்ளி விருது தமிழக அரசால் கடந்த 5-ந் தேதி சென்னையில் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் செங்குட்டுவன், பட்டதாரி ஆசிரியர் இளையராஜா, மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஜோதி ஆகியோர் அந்த பள்ளியிலிருந்து ஒரு மாணவரை அழைத்து கொண்டு வந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணனிடம், தூய்மை பள்ளிக்கான விருதினை காண்பித்தனர். அப்போது மாணவர்கள்- ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பால் தான் இந்த விருது சாத்தியமாயிற்று என தோ.செல்லாண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்துக்கு வாழ்த்துகள் கூறி அவர் பாராட்டு தெரிவித்தார்.

இதோடு மட்டும் அல்லாமல் இந்த பள்ளிக்கு மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் தேசிய விருது, இன்னும் சில தினங்களில் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக புதுடெல்லியில் இருந்து அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளிக்கு வருகை தந்து தூய்மை நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி விசாரித்து விட்டு குறிப்பெடுத்து கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தோ.செல்லாண்டி பாளையம் பள்ளி 2-ம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசிக்கப்பட்டவை