மாவட்ட செய்திகள்

சேந்தமங்கலம் அருகே கிழங்கு வியாபாரி கொலை, கள்ளக்காதலியின் மகள் உள்பட 2 பேர் கைது + "||" + Near Senthamangalam The beetle murderer killed, Girlfriend Two persons, including a daughter, were arrested

சேந்தமங்கலம் அருகே கிழங்கு வியாபாரி கொலை, கள்ளக்காதலியின் மகள் உள்பட 2 பேர் கைது

சேந்தமங்கலம் அருகே கிழங்கு வியாபாரி கொலை,  கள்ளக்காதலியின் மகள் உள்பட 2 பேர் கைது
சேந்தமங்கலம் அருகே முட்புதரில் கிடந்த பிணம் பற்றி துப்பு துலங்கியது. கிழங்கு வியாபாரியான அவரை கொன்று உடலை எரித்தது அம்பலம் ஆனது. இதுதொடர்பாக கள்ளக்காதலியின் மகள் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்,

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் கிராமத்தில் மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் கடந்த மாதம் 21-ந்தேதி ஒரு ஆண் பிணம் கிடந்தது. அந்த உடல் எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதுபற்றி சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது பற்றி உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர் தற்கொலை செய்தாரா? அல்லது எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றியும் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பற்றி துப்பு துலங்கியது.

முட்புதரில் பிணமாக கிடந்தவர் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி பெருமாப்பட்டி காலனியைச் சேர்ந்த கொக்கி கிருஷ்ணன் (வயது 47) என்று தெரியவந்தது. இவர் கிழங்கு வியாபாரம் செய்து வந்தார்.

கொக்கி கிருஷ்ணனுக்கும், 47 வயது பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். அதன்பின்னர் தான் அந்த பெண்ணுக்கும், அவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கொக்கி கிருஷ்ணன், கள்ளக்காதலி வீட்டுக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.

அதன்பின்னர் கடந்த மாதம் 20-ந்தேதி அவர், கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அப்போது கள்ளக்காதலிக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலி, கள்ளக்காதலியின் மகள் உள்பட 3 பேர் சேர்ந்து கொக்கி கிருஷ்ணனை தாக்கி உள்ளனர். இதில் கொக்கி கிருஷ்ணன் இறந்தார். அவருடைய உடலை தூக்கி வந்து பொட்டணம் கிராமத்தில் மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொக்கி கிருஷ்ணன் கொலை தொடர்பாக கள்ளக்காதலியின் மகள் உள்பட 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதலியை கைது செய்து விசாரணை நடத்தினால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.