மாவட்ட செய்திகள்

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் + "||" + Near Nallampalli Drinking water With empty gut Womens struggle

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மாதேமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது குட்டூர் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த சிலர் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, முறையற்ற இணைப்பு மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் குட்டூர் கிராமத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறினர்.

இந்த நிலையில் சேதப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைந்துள்ள பகுதியில் அப்பகுதி பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து தாசில்தார் பழனியம்மாளிடம் புகார் தெரிவித்தனர்.

அப்போது அவர் ஓரிரு நாட்களில் சேதப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்களை சீரமைத்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.