மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் + "||" + Enter into the garden Elephants pump

அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் அங்கு பயிரிடப்பட்டிருந்த ½ ஏக்கர் பரப்பளவிலான மரவள்ளிக்கிழங்கு சேதம் ஆனது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கிராம் தாமரைக்கரை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஈரன்ன தம்படி (வயது 50). விவசாயி. இவருடைய 2 ஏக்கர் தோட்டம் கிராமத்தையொட்டி உள்ளது. இந்த தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு உள்ளார். தோட்டத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவருடைய வீடு உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஒரு ஆண் யானை, 4 பெண் யானை, ஒரு குட்டி யானை என மொத்தம் 6 யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஈரன்ன தம்படியின் தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கை பிடுங்கி தின்றன.

யானைகளை கண்டதும் கிராமத்தை சேர்ந்த நாய்கள் குரைக்க தொடங்கின. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் விழித்து எழுந்து பார்த்தனர். அப்போது ஈரன்ன தம்படியின் தோட்டத்துக்குள் 6 யானைகள் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீப்பந்தங்களை கொளுத்தியும், தகர டப்பாக்களில் ஒலி எழுப்பியும் யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல், விவசாயிகளை துரத்தியது. இதனால விவசாயிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும், வனத்துறையினர் விரைந்து சென்று வனத்துறை ஜீப்பில் உள்ள சைரன் விளக்கை ஒளிர விட்டும், ஏர்ஹாரன் மூலம் ஒலி எழுப்பியும் யானைகளை விரட்ட முயன்றனர். 6 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நேற்று காலை 6 மணி அளவில் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் அறுவடைக்கு தயாராக இருந்த ½ ஏக்கர் பரப்பளவிலான மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் சேதம் ஆனது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தோட்டத்துக்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க அகழி அமைக்க வேண்டும். மேலும் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.