இரட்டை வேட பா.ஜனதா அரசை வீழ்த்துவது தான் இலக்கு ‘தேர்தல் களத்திற்கு நாம் தயாராகி விட்டோம்’ மு.க.ஸ்டாலின் பேச்சு


இரட்டை வேட பா.ஜனதா அரசை வீழ்த்துவது தான் இலக்கு ‘தேர்தல் களத்திற்கு நாம் தயாராகி விட்டோம்’ மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 16 Sep 2018 12:00 AM GMT (Updated: 15 Sep 2018 6:39 PM GMT)

இரட்டை வேட பா.ஜனதா அரசை வீழ்த்துவது தான் நமது தற்போதைய இலக்கு. நாம் தேர்தல் களத்திற்கு தயாராகி விட்டோம் என்று விழுப்புரத்தில் நடந்த முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:–

இந்த முப்பெரும் விழா விருது வழங்கக்கூடிய விழா என்று சொல்வதா, மாவட்ட அளவில் நடைபெறும் மாநாடு என்று அழைப்பதா. மாநில மாநாடு என்று எண்ணக்கூடிய அளவுக்கு இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது.

என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என்கிற சொல் நம்மை இணைக்கின்ற மந்திர சொல். ஒரே குடும்பமாக நம்மை கட்டிப்போடுகின்ற சொல். உடன் பிறப்புகளே என்று சொல்லும் போது நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள், ஆர்வத்தை வெளிப்படுத்துகிறீர்கள். இதனால் எனக்கு ஏற்படும் புத்துணர்வை விவரிக்க முடியவே முடியாது. காரணம் நம் உயிரோடு கலந்துள்ள கலைஞர் நமக்காக உருவாக்கி தந்த லட்சிய உணர்வை ஊட்டுகின்ற சொல் அந்த சொல். அறைநூற்றாண்டுக்கும் மேலாக அந்த சொல்லுக்கும் குரலுக்கும் உருகி நின்றது தமிழகம். இனி அந்த காந்த குரலை கேட்க முடியாதா என்று ஏக்க பெருமூச்சோடு திரண்டு உள்ளோம்.

கலைஞரை யார் வேண்டுமானாலும் அணுகலாம். எப்போது வேண்டுமானாலு சந்தித்து, எதைபற்றியும் அவரிடம் விவாதிக்கலாம். உரிமையோடு கேள்வி கேட்கலாம். அதற்குரிய விளக்கத்தை பொறுமையாக சொல்லும் பழக்கத்தை கலைஞர் தொடர்ந்து கடைபிடித்தவர். அத்தகையை பண்பாட்டில் வந்த நான், உங்கள் முன்னால் உள்ளேன். அவர் வகுத்து தந்துள்ள கொள்கை வழியில் இன்று தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள நானும் சொல்கிறேன் கழக தோழர் மட்டுமல்ல கடைக்கோடி தொண்டனுக்கும் குறைநிறைகளை சொல்ல உரிமை உண்டு.

15 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. மண்டல மாநாடு விழுப்புரத்தில் நடந்த போது அதற்கு நான் தலைமை தாங்கினேன். தற்போது தி.மு.க.வின் தலைவராக முதல்முதலாக விழுப்புரம் விழாவில் பேசுகிறேன். இந்த விழுப்புரத்தை நான் மறக்க மாட்டேன். தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டு வலிமையோடு வந்துள்ளேன்.

கலைஞர் தி.மு.க. தலைவரான போது, பேராசிரியர் கூட முதலில் நம்பிக்கை பெறவில்லை. பின்னர் எனது செயலை பார்த்து தலைவராக ஏற்றுக்கொண்டார் என்று விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் கலைஞர் குறிப்பிட்டார். ஆனால் நான், கலைஞரை விட கொடுத்து வைத்தவன். என்னை தலைவராக பேராசிரியர் தான் முதன்முதலாக முன்மொழிந்துள்ளார். என்னை ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள், உங்களது உதிரத்தில் உயிராய் உங்களது கரம்பற்றி நிற்கிறேன்.

தமிழகத்திற்கு இன்று பிடித்துள்ள சோதனையில் இருந்து காப்பாற்ற, அடிமையாய் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்ட உறுதி எடுக்க வேண்டும். ஓய்வெடுக்காமல் உழைத்தால் தான் மதசார்பற்ற ஆட்சியை உருவாக்கிட முடியும். மதவாத நச்சுக்காற்றை முறியடித்து, பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

இந்தியாவில், ஜனநாயகத்துக்கு விரோதமான பாசிச ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதனால் தான் பாசிச ஆட்சி ஒழிக என்று குரல் கொடுத்த ஒரு மாணவியின் பாஸ்போர்ட்டை முடக்கி உள்ளனர்.

இந்துக்கள் மீது தூசி, துரும்பு விழுந்தால் காவி புரட்சி வெடிக்கும் என்று இந்த தமிழகத்தை துண்டாக்க நினைத்து துடித்து கொண்டு இருக்கிறார்களே. அவர்களை பார்த்து நான் கேட்கிறேன். பலகோடி ரூபாயை உங்களுக்கு தேர்தல் நிதியாக தாரை வார்த்து, வேதாந்தா நிறுவனத்தின் கைக்கூலியாக மாறி தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்ட 13 பேரில் 9 பேர் இந்துக்கள் தானே. நீட் தேர்வால் இறந்த பிரதீபா, இந்து தானே. கேரளாவில் இறந்த மாணவின் தந்தை கிருஷ்ணசாமி சீனிவாசன் ஒரு இந்து தானே.

நெடுவாசல், கதிராமங்கலத்தில் போராடி வாழ வழியின்றி தினம் தினம் செத்து கொண்டு உள்ளார்களே, டெல்லியில் போராடிய விவசாயிகளும் இந்துக்கள் தானே.

இம் என்றால் சிறைவாசம், அம் என்றால் துப்பாக்கி சூடு என்பது உங்களது அரசியல் நாகரிகமாக உள்ளது. யாரிடம் கபட நாடகம் ஆட முற்படுகிறீர்கள். நான் உறுதியோடு சொல்கிறேன் ஒரு போதும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். பாடம் புகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான சூழ்நிலை உருவாகி கொண்டு இருக்கிறது.

தமிழக ஆட்சியாளர்கள் அடிமையாளராக தான் கோட்டையில் உள்ளனர். கொள்ளை அடிப்பது தான் அவர்களது லட்சியம். மானம், மரியாதை என அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டு ஆட்சியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதே அவர்களது லட்சியம்.

ஊழல் செய்வது தான் அவர்களது முழக்கமாக இருந்து கொண்டு இருக்கிறது. குட்கா, குவாரி, முட்டை, பேருந்து, நெடுஞ்சாலை, உள்ளாட்சி, ஸ்மார்ட் சிட்டி, டெண்டர், பினாமி, நின்றால், நடந்தால், படுத்தால் உட்கார்ந்தால் ஊழல் என்று ஊழலோ ஊழலாக ஒரு ஆட்சி நடக்கிறது.

முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை நடக்கிறது. அமைச்சர், பொறுப்பில் உள்ள தலைமை செயலாளர், இதை விட வெட்க கேடு காவல்துறையின் தலைவராக உள்ள டி.ஜி.பி.யின் வீட்டில் சோதனை நடக்கும் நிலை தமிழகத்திற்கு வந்துள்ளது.

யார் யாருக்கு லஞ்சம் என்கிற டைரி சிக்கி உள்ளது. காருக்குள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் சிக்கி உள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் மட்டும் இன்னும் சிக்கவில்லை. விரைவில் சிக்க போகிறார்கள். எப்போது. விரைவில் தி.மு.க. ஆட்சி உருவாகும் போது கரன்சி நோட்டுகளை எண்ணுபவர்கள் கம்பி என்ணும் சூழ்நிலை வருமா இல்லையா என்று பாருங்கள்.

தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்கி கொண்டு இருக்கிற அ.தி.மு.க. அரசு தான் இன்று தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமான சின்னமாக விளங்கி கொண்டு இருக்கிறது. கொள்கை இல்லாத ஆட்சி, நாட்டுக்கே ஆபத்தான ஆட்சி. கொள்கை என்று கேட்டால் தெர்மாகோலா என்று கேட்க கூடிய அறிவியல் மேதாவிகள் அங்கு உள்ளனர்.

ஒரு நிமிடம் கூட இந்த தமிழகத்தை ஆட்சி செய்ய தகுதி இல்லாத ஜோக்கர்கள் அவர்கள். அரசு நிர்வாகத்தை நாசமாக்கி தமிழகத்தை சீரழித்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களால் தான் ஜல்லிக்கட்டுக்கு நாம் மல்லுக்கட்டினோம், ஸ்டெர்லைட் பேராட்டத்தில் நம் உறவுகளை பறிகொடுத்தோம். தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ளவே இந்த ஆட்சி உள்ளது. ஊழல் அடிமை ஆட்சியை வேரோடு பிடுங்க வேண்டும். நம்மால், உங்களால் முடியும்.

அண்மையில் பாரத பிரதமர் மோடி ஒரு கூட்டத்தில் பேசும் போது அவர் ஆற்றிய உரையில் எங்களது 48 மாத நிர்வாகம் பற்றி விவாதிக்க தயார் என்று கூறியுள்ளார். மோடி அவர்களே விழுப்புரத்தில் நடைபெறும் இந்த மேடையில் இருந்து கேட்கிறேன். உங்களால் பதில் தர முடியுமா?

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவோம் என்றீர்களே. நிறைவேற்றி விட்டீர்களா 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்றீர்களே எங்காவது வேலை வாய்ப்பு உருவாக்கி தந்து உள்ளீர்களா?.

கருப்பு பணத்தை ஒழிக்க தான் பண மதிப்பிழப்பு என்றீர்களே, ஒழிந்துவிட்டதா?, வறுமை ஒழிக்க என்றீர்களே, வறுமை ஒழிந்து விட்டதா? உச்சநீதிமன்ற நீதிபதிகளே வீதிக்கு வந்து பேட்டி தருகிறார்ளே யாருடைய ஆட்சியிலாவது இதுபோன்று நடந்துள்ளதா? நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அனுப்பி வைத்தோமே என்ன ஆகிவிட்டது. இதற்கு பதில் சொல்ல முடியுமா?. ராஜ்பவன் கவர்னர் மாளிகையா அல்லது மாநிலத்தை கண்காணிக்கும் கேமராக்களா.

இந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு உருப்படியான ஒரு திட்டம் என்ன என்று ஒன்றாவது சொல்லுங்கள் பார்ப்போம். மாநிலத்தை ஆளும் இந்த கொள்ளை கூட்டத்தையும், அதை காப்பாற்றக்கூடிய வகையில் செயல்படும் மதவாத, சர்வாதிகார இரட்டை வேட பா.ஜ.க. அரசை ஜனநாயக களத்தில் வீழ்த்துவது ஒன்றுதான் தற்போதைய நமது இலக்கு.

இது முப்பெரும் விழா மேடை மட்டுமல்ல. தேர்தல் களத்திற்கு நாம் தயாராகி விட்டோம் என்று பறைசாற்றுகிற பாசறை என்பதை மறந்து விடக்கூடாது. எந்த தேர்தல் என்று கேட்கலாம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலா, உள்ளாட்சி, நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் என்று எந்த தேர்தலாக இருந்தாலும் களம் எதுவாக இருந்தாலும் வெற்றி தி.மு.க.வுக்கு தான். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கலைஞர் மறையவில்லை அவர் ஒவ்வொருவருடைய உருவத்திலும், உள்ளத்திலும் உள்ளார். கலைஞர் சாதிக்க வேண்டியதை, கலைஞர் மகன் சாதித்தான், தலைமை தொண்டன் சாதித்தான் என்ற மகனாக நான் மாறவேண்டும். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். உங்களின் ஒருவனாக பாருங்கள்.

தமிழகத்தை வளம் பெற்ற நாடாக உருவாக்கிட வேண்டும். பாசிச ஆட்சி முடியட்டும். மக்களாட்சி மலரட்டும், ஊழல் ஆட்சி ஒழியட்டும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மலரட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story