மாவட்ட செய்திகள்

முல்லைப்பெரியாற்றில் தடுப்பணை கட்டி மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு + "||" + Farmers resistance to Mullaperiyar and drinking liquor for Madurai

முல்லைப்பெரியாற்றில் தடுப்பணை கட்டி மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு

முல்லைப்பெரியாற்றில் தடுப்பணை கட்டி மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு
முல்லைப்பெரியாற்றில் தடுப்பணை கட்டி மதுரைக்கு குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பூமிபூஜையை நடத்தாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
கூடலூர்,

மதுரை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறப்பு குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி முல்லைப்பெரியாறு அணையின் தலைமதகான லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் இருந்து ரூ.1,295 கோடியில் 56 கி.மீ. தரைவழியாக குழாய்கள் அமைத்து தண்ணீர் மதுரைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்காக லோயர்கேம்பில் உள்ள கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேற்பகுதியில் புதிய தடுப்பணை கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

கோடைகாலங்களில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குறைந்த அளவே திறந்து விடப்படும். அந்த தண்ணீர் கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு வந்து சேராது. அப்படி இருக்கும் பட்சத்தில் புதிய தடுப்பணை கட்டினால் கம்பம் கூட்டுக்குடிநீர் தடுப்பணைக்கு தண்ணீர் கிடைக்காது.

எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தினால், தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர், மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் மதுரை மாநகராட்சி துணை ஆணையாளர் மணிவண்ணன், மாநகராட்சி பொறியாளர் மதுரம் ஆகியோர் தலைமையில் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் மதுரைக்கு குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திட்ட பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பின்பு இந்த திட்டத்துக்கான கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டன. நேற்று தடுப்பணை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜையை நடத்த உத்தமபாளையம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவி பொறியாளர் கதிரேசன் உள்பட பொதுப்பணித்துறையினரும், ஒப்பந்ததாரரும் லோயர்கேம்ப் குடிநீர் வடிகால் வாரிய அலுவலக பகுதிக்கு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அனைத்து விவசாயிகள் சங்க மாநில துணைச்செயலாளர் செங்குட்டுவன், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராஜீவ், இயற்கை வேளாண் விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் அங்கு திரண்டனர்.

பின்னர் பூமிபூஜையை நடத்த விடாமல் தடுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது விவசாயிகள் லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் தடுப்பணை கட்டி மதுரைக்கு குடிநீர் கொண்டு சென்றால், தேனி மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே வைகை அணையை தூர்வாரி தண்ணீர் எடுத்து செல்லுமாறு வலியுறுத்தினர். இல்லையெனில் ஆற்றின் வழியாக தண்ணீர் கொண்டு செல்லுங்கள். ஆனால் குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் திட்டவட்டமாக கூறினர்.

விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பூமிபூஜையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அந்த பகுதியில் மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க லோயர்கேம்ப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.