மாவட்ட செய்திகள்

கஜா புயல் எதிரொலி: கரூர் மண்டியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி + "||" + The echo of the ghaj storm: the price of the karoor mangai fall in price

கஜா புயல் எதிரொலி: கரூர் மண்டியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி

கஜா புயல் எதிரொலி: கரூர் மண்டியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி
கஜா புயல் எதிரொலி காரணமாக கரூர் மண்டியில் வாழைத்தார் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.
கரூர்,

கஜா புயலின் சீற்றத்தால் கரூர் மாவட்டம் குளித்தலை, கடவூர், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வாழைமரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். எனினும் குலைதள்ளிய வாழைகளை கார்த்திகை தீபத்திருநாள் நெருங்கி வருவதால் உடனடியாக விற்று விடலாம் என்கிற நோக்கில், கரூர் காமராஜர் மார்க்கெட் அருகே ரெயில்வே ஜங்ஷன் ரோட்டில் உள்ள வாழைக்காய் மண்டிகளுக்கு விவசாயிகள் அதிகளவில் கொண்டு வந்தனர்.

திருச்சி தொட்டியம், ஈரோடு சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும்கூட வாழைத்தார்கள் கொண்டுவரப்பட்டன. மழையின் காரணமாக வாழைத்தார்களை ஏலத்திற்கு எடுக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.500-க்கு விற்பனையான ரஸ்தாலி தார் ஒன்று தற்போது ரூ.250-க்கு விற்பனையானது. மேலும் பூவன் தார் ரூ.300-க்கும், கற்பூரவல்லி ரூ.350-க்கும், செவ்வாழை ரூ.300-க்கும் அதிகபட்சமாக விலைபோனதாக மண்டி வியாபாரிகள் தெரிவித்தனர்.

கரூரில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் அதனை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பெட்ரோல்-டீசல் விலையுயர்வின் காரணமாக வாழைத் தார்களை கரூருக்கு கொண்டுவருவதற்கே ஒரு குறிப்பிட்ட தொகை செலவாகிவிடுகிறது. இதனால் கையிலிருந்து பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. எனவே விலை வீழ்ச்சி ஏற்படுகிற சமயத்தில் அரசே ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் இருந்து வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் சத்துணவு திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வாழைப்பழமும் சேர்த்து வழங்கிட வேண்டும். மேலும் வாழைப்பழங்களில் இருந்து ஜாம், பவுடர் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களை தயார் செய்யும் விதமாக திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தினர் முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரே நேரத்தில் வாழைக்காய்கள் தேக்கமடையாமல் அரசின் மூலம் ஒரு குறிப்பிட்ட விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு விடும் என வாழை விவசாயிகள் தெரிவித்தனர்.