மாவட்ட செய்திகள்

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர்: கிராமத்து விஞ்ஞானி ‘நெல்’ ஜெயராமன் + "||" + 174 Restore traditional rice varieties: Village scientist 'Nell' Jayaraman

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர்: கிராமத்து விஞ்ஞானி ‘நெல்’ ஜெயராமன்

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர்: கிராமத்து விஞ்ஞானி ‘நெல்’ ஜெயராமன்
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர், கிராமத்து விஞ்ஞானி, நெல்லின் காவலன் என்றும் அழைக்கப்பட்டவர் நெல் ஜெயராமன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று மரணம் அடைந்தார்.
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஆதிரெங்கம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி-முத்துலட்சுமி தம்பதியரின் 3-வது மகனாக பிறந்தவர் ஜெயராமன் (வயது 54). இவர் கட்டிமேட்டில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவருடைய மனைவி சித்ரா, அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சீனிவாசராம். இவர், திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜெயராமனின் மூத்த அண்ணன் ஞானசேகரன், அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டாவது அண்ணன் செல்வராஜ், விவசாயி. மூன்றாவதாக ஜெயராமனும், அவருடைய சகோதரியும் இரட்டையராக பிறந்தவர்கள். சகோதரி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அவரது கணவர் கணபதியுடன் வசித்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தில் சாதாரண ஊழியராக ஜெயராமன் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் நகரில் உள்ள மூத்த மருத்துவர் பாசுமணி என்பவர் நடத்தி வந்த நுகர்வோர் பாதுகாப்பு குழுவில் செயலாளராக இருந்தார். பின்னர் தனியாக நுகர்வோர் பாதுகாப்பு மையம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார்.

இதற்கிடையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை சந்திக்கும் வாய்ப்பு ஜெயராமனுக்கு கிடைத்தது. அப்போது நம்மாழ்வாருடன், அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஜெயராமனும் சென்றார். நம்மாழ்வார் சிஷ்யர் ஆனார். இதனால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் எல்லாம் நம்மாழ்வாரை சந்திக்கும்போது, ஜெயராமனையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது ஒவ்வொரு விவசாயியும், தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய நெல் விதைகளை நம்மாழ்வாரிடம் கொடுத்து இந்த நெல் விதைகளை பாதுகாக்க வேண்டும் என கூறினர். அந்த விதைகளை நம்மாழ்வார், ஜெயராமனிடம் கொடுத்து இதை பல மடங்காக பெருக்கும் பொறுப்பை உன்னிடம் விடுகிறேன் என்று கூறினார். 174 வகையான பாரம்பரிய நெல் விதைரகங்களை தான் மீட்டெடுத்ததாகவும் ஜெயராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மாப்பிள்ளை சம்பா, யானைகவுனி, கருப்பு கவுனி, சீரக சம்பா, தூயமல்லி, குள்ளக்கார், கிச்சடி சம்பா உள்ளிட்ட ரகங்களாகவும், இந்த காலத்தில் நாம் மருந்து மூலம் பயன்படுத்தும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் அந்த காலத்தில் இந்த நெல் ரகங்கள் மூலம் சரி செய்துள்ளார்கள்.

குறிப்பாக திருமணமான தம்பதியருக்கு இல்லறம் சிறக்க ஒரு நெல் ரகம், கர்ப்ப காலங்களில் குழந்தை வயிற்றில் வளரும்போது அந்த குழந்தை நன்றாக வளர அதற்கு ஒரு நெல் ரகம், மீண்டும் பிரசவ காலத்தில் சுக பிரசவம் பெரும் உடல்வலிமையை தரக்கூடிய நெல் ரகம்.குழந்தை பிறந்த உடன் தாய் பால் சுரப்பதற்கு ஒரு நெல் ரகம், சர்க்கரை நோய், ஆஸ்துமா, சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் சரி செய்ய கூடிய நெல் ரகங்களையும் மீட்டு எடுக்கப்பட்டதாக ஜெயராமன் தெரிவித்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஆதிரெங்கம் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை ஜெயராமன் நடத்தி வந்தார். இதில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், வேளாண் வல்லுனர்கள், தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் விவசாய பிரதிநிதிகள், விவசாய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்துகொண்டு பாரம்பரிய நெல் விதைகளை பற்றி தெரிந்துகொண்டு நெல் விதைகளையும் வாங்கி சென்றனர். கிராமத்து விஞ்ஞானியாக நெல் ஜெயராமன் திகழ்ந்தார்.

பொதுவாக அந்த நெல் திருவிழாவில் 1 கிலோ பாரம்பரிய நெல் விதையை வாங்கி சென்று அடுத்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு வரும்போது இருமடங்காக நெல் விதைகளை வழங்க வேண்டும் என்றும் கூறுவார்கள். அதேபோல விவசாயிகளும், நெல் விதையை வாங்கிச் சென்று இரு மடங்காக வழங்குவார்கள். இந்த நெல் திருவிழா 2018 வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் நடை பெற்றது.

இந்த நிலையில் அவருடைய அடித்தட்டு மக்களுக்கான கண்டுபிடிப்பான பாரம்பரிய நெல்லை மீட்டெடுத்தற்கான ஜனாதிபதி விருதான ‘கிருஷ்டிசல்மான்’ விருது, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் பாராட்டு சான்றிதழ், தமிழக அரசின் சிறந்த நுகர்வோர் செயல்பாட்டாளர் உள்ளிட்ட பல விருதுகளை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஜெயராமன் பெற்றுள்ளார்.

இவர் புதுச்சேரியை தலைமையிடமாக கொண்ட ‘கிரியேட்’ என்ற பாரம்பரிய நெல் விவசாயத்தை பற்றிய பிரசார இயக்கத்தில் இணைந்து தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாய பண்ணைகள் அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு மாற்றினார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோல் புற்றுநோய் தாக்கி சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். ஓரளவுக்கு உடல் நலம் தேறிய அவர் மீண்டும் நெல் திருவிழா பணிகளை தொடர்ந்தார்.

இதனால் தனது உடல் நிலையை கவனிக்காமல் நோய் தாக்கம் அதிகமானதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை ஜெயராமன் மரணம் அடைந்தார். நெல் ஆய்வு பணிகளில் தீவிரமாக செயல்பட்டதால் இவர் ‘நெல் ஜெயராமன்’ என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

நெல் ஜெயராமன் மறைவையொட்டி அவர் பிறந்த கிராமமான கட்டிமேடு கிராமமே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளது.