அ.ம.மு.க. பிரமுகரை கொன்று கிணற்றில் வீச்சு: 15 நாட்கள் ஆகியும் உடலை மீட்க முடியாமல் போலீசார் திணறல்


அ.ம.மு.க. பிரமுகரை கொன்று கிணற்றில் வீச்சு: 15 நாட்கள் ஆகியும் உடலை மீட்க முடியாமல் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 7:30 PM GMT)

அ.ம.மு.க. பிரமுகரை கொன்று உடலை கிணற்றில் வீசிய சம்பவத்தில் 15 நாட்களாக தோண்டியும் உடலை மீட்க முடியாமல் போலீசார் திணறுகிறார்கள்.

கோவை, 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேணு (வயது 36). ஏரல் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளராக இருந்து வந்தார். இவருடைய மனைவி பாலதீபா (31). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கோவை கோர்ட்டில் சாட்சி சொல்வதற்காக ஜெயவேணு கோவை வந்தார். பின்னர் இரவு அவருடைய உறவினரான துடியலூர் அருகே உள்ள வடமதுரையை சேர்ந்த ராஜேஷ், துரைப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (34) ஆகியோர் சேர்ந்து வரப்பாளையம் பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், அங்கு கிடந்த இரும்பு சுத்தியலால் ஜெயவேணுவின் தலையில் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜெயவேணுவின் உடலை அங்குள்ள ஒரு கிணற்றில் தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீஸ் விசாரணைக்கு பயந்த சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த வழக்கில் புனேவுக்கு தப்பி ஓடிய ராஜேசை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜெயவேணுவை தூக்கி வீசிய கிணற்றை அடையாளம் காட்டினார். 30 அடி அகலம், 130 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. அது பாழடைந்த கிணறு என்பதால் அந்த பகுதியை சேர்ந்த ஊராட்சிகள் சார்பில் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு வருகிறது. அங்கு 15 அடி உயரத்துக்கு குப்பைகள் இருந்தன. எனவே அந்த கிணற்றை தோண்டி ஜெயவேணுவின் உடலை மீட்க போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 21-ந் தேதி கிணற்றை தோண்டும் பணி தொடங்கியது. கிணற்றில் உள்ள குப்பைகளுடன் மழைநீரும் சேர்ந்து உள்ளதால் கடுமையாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பணியில் உள்ள தொழிலாளர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். நேற்று 15-வது நாளாக தோண்டும் பணி நடந்தது. கடுமையான துர்நாற்றம் வீசுவதால் கிணற்றை தோண்டும் பணி மெதுவாக நடப்பதால் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் உடலை மீட்க முடியாமல் போலீசார் திணறுகிறார்கள்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறியதாவது:-

கிணற்றில் உள்ள குப்பைகளை எளிதாக வெளியே எடுப்பதற்காக பக்கவாட்டில் பாதை அமைத்து குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. கிணறு தோண்டுவதில் கைதேர்ந்த 25 தொழிலாளர்களை அழைத்து வந்து தோண்டப்பட்டது. ஆனால் அங்கு குவிந்துள்ள குப்பைகள் அதிகளவில் துர்நாற்றம் வீசியதால் அவர்களால் மேற்கொண்டு தோண்ட முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

எனவே தற்போது சிறிய அளவிலான எந்திரத்தை அந்த கிணற்றுக்குள் இறக்கி குப்பைகளை தோண்டும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள குப்பைகளில் அதிகளவில் புழுக்கள் உள்ளன. அதில் இருந்து உடனே தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே மிகவும் கவனத்துடன் குப்பையை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் 5 டன் குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது.

தற்போது 10 அடி ஆழம் வரை குப்பைகளை சுத்தம் செய்துவிட்டோம். இன்னும் 5 அடி வரை உள்ள குப்பைகளை மட்டுமே அள்ள வேண்டும். அதற்குள்தான் ஜெயவேணுவின் உடல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அந்த உடல் அழுகிய நிலையில் இருக்கும் என்பதால் குப்பைகளை அள்ளும்போது மிகவும் கவனத்துடன் அள்ளி வருகிறோம். எனவே இன்னும் ஒரு வாரத்தில் உடலை மீட்டு விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story