மாவட்ட செய்திகள்

நிதியை குறைக்க வேண்டும் என்று சொல்வதா? கவர்னர் கிரண்பெடிக்கு தனியார் பள்ளிகள் சம்மேளனம் கண்டனம் + "||" + To say that you have to reduce funding Governor Kiran Bedi schools Convention condemned

நிதியை குறைக்க வேண்டும் என்று சொல்வதா? கவர்னர் கிரண்பெடிக்கு தனியார் பள்ளிகள் சம்மேளனம் கண்டனம்

நிதியை குறைக்க வேண்டும் என்று சொல்வதா? கவர்னர் கிரண்பெடிக்கு தனியார் பள்ளிகள் சம்மேளனம் கண்டனம்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியை குறைக்க சொன்ன கவர்னர் கிரண்பெடிக்கு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,

இதுகுறித்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் சம்மேளன பொதுச்செயலாளர் கிறிஸ்டோபர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் உள்ள 34 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளையும் அமல்படுத்தவில்லை. 30 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றியவர்களுக்குக்கூட பதவி உயர்வு திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை.

பல ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த சலுகைகளை பெறாமலேயே பணிஓய்வும் பெற்றுவிட்டனர். மேலும் பென்சன்தாரர்களுக்கு மருத்துவ படியும் வழங்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை 12 ஆண்டுகளாக நிரப்பவில்லை. அந்த காலியிடங்களில் பல ஆண்டுகளாக சொற்ப ஊதியத்தில் வேலை செய்துவரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதற்காக பள்ளி நிர்வாகங்கள் புதுவை கல்வித்துறைக்கு அனுப்பிய பரிந்துரைகள் பல ஆண்டுகளாக கல்வித்துறையால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கவர்னர், தான் பதவியேற்ற சில மாதங்களிலேயே அரசு உதவி பெறும் சில பள்ளிகளை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்து அவற்றை சரிசெய்வதற்காக ஒரு குழுவை அமைத்து அறிக்கை வெளியிட்டார். அந்த குழு தனது அறிக்கையை புதுவை அரசிடம் சமர்ப்பித்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. புதுவை அரசு குழுவின் அறிக்கையை வெளியிடவும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டும் தரவில்லை.

சில நாட்களுக்கு முன்பு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான 3 மாத சம்பளத்துக்கான கோப்பு கவர்னர் அலுவலகத்துக்கு சென்றபோது கவர்னர் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியை குறைக்கவேண்டும் என்று கோப்புகளில் குறிப்பிட்டிருப்பதாக அறிகிறோம். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வேதனை அளிப்பதாகவும் உள்ளது. புதுவையில் உள்ள 34 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 28 பள்ளிகளுக்கு மேல் சிறுபான்மையினரால் நடத்தப்படுகிறது. புதுவையின் கல்வி தேவையை இந்த சிறுபான்மை நிறுவனங்களே கணிசமான அளவுக்கு பூர்த்தி செய்கிறது.

ஆகவே கவர்னர் நிதி குறைப்பு என்பதை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக அவர் அமைத்த கமிட்டியின் பரிந்துரைகளை வெளியிடுவதோடு அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.