மாவட்ட செய்திகள்

ரூ.19¾ கோடி மோசடி வழக்கில் மேலும் ஒரு வங்கி அதிகாரி கைது + "||" + More than a bank official arrested in case of Rs.19¾ Cr

ரூ.19¾ கோடி மோசடி வழக்கில் மேலும் ஒரு வங்கி அதிகாரி கைது

ரூ.19¾ கோடி மோசடி வழக்கில் மேலும் ஒரு வங்கி அதிகாரி கைது
ரூ.19¾ கோடி மோசடி வழக்கில் மேலும் ஒரு வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்,

திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலமாக ரூ.19¾ கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒரு வங்கி அதிகாரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூரை சேர்ந்தவர் நடராஜன். இவர் பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். பனியன் நிறுவன உரிமையாளர்கள், வெளிநாடுகளுக்கு ஆடைகளை அனுப்பி வைத்து வெளிநாட்டில் சரக்குகளை பெற்றதும், அங்குள்ள வங்கி ஆவணங்களை திருப்பூரில் உள்ள உரிமையாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த ஆவணங்களை திருப்பூரில் உள்ள வங்கியில் கொடுத்து பனியன் உரிமையாளர்கள் ஆர்டருக்கான தொகையை பெற்று வருகிறார்கள்.

நடராஜனுக்கு தெரிந்த நபரான திருப்பூரை சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவர், திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவருடைய மனைவி பிரியா ஆகியோர் துணையுடன் போலியாக ஆவணங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு சரக்குகளை அனுப்பி வைக்காமலேயே கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் இருந்து பெற்று மோசடி செய்துள்ளனர். அதுபோல் நடராஜனை ஏமாற்றி அவருடைய பனியன் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு ரூ.6 கோடியே 12 லட்சத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் இருந்து பெற்று மோசடி செய்துள்ளனர். இதற்கு அந்த வங்கியின் மேலாளராக பணியாற்றிய சோமாஜூலு மற்றும் மூத்த மேலாளர் சங்கர்(வயது 52), மேலும் 2 அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடராஜன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், அவருடைய மனைவி பிரியா, கார்ப்பரேஷன் வங்கி மேலாளர் சோமாஜூலு ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர். இதுபோல் இந்த கும்பல் திருப்பூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரான ஆரோன் ரஷீத் என்பவரின் பெயரில் ரூ.8¾ கோடியும், ராமசாமி என்பவரின் பெயரில் ரூ.4 கோடியே 92 லட்சமும் மோசடி செய்தது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை கணபதி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதற்குள் திருப்பூர் கார்ப்பரேஷன் வங்கியில் இருந்து சங்கர் மாறுதலாகி வெளிமாநிலம் சென்றார். அவர் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, வங்கி மேலாளர் பதவியில் இருந்து சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சங்கரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் மேலும் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.