மாவட்ட செய்திகள்

பா.ஜ.க. தலைவரின் கருத்துக்கு கண்டனம்: முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் வலியுறுத்தல் + "||" + Condemns BJP leader's remark: The whole struggle should be successful

பா.ஜ.க. தலைவரின் கருத்துக்கு கண்டனம்: முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் வலியுறுத்தல்

பா.ஜ.க. தலைவரின் கருத்துக்கு கண்டனம்: முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் வலியுறுத்தல்
பா.ஜ.க. தலைவர்களின் கருத்துக்கு அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. வருகிற 8–ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தினை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் ஐ.என்.டி.யு.சி. தலைவர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேது செல்வம், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சீனுவாசன் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 8–ந் தேதி (நாளை) முழுஅடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் தேவையற்றது என பா.ஜ.க. மாநில தலைவர் கருத்து தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தொழிலாளர்களுக்கு எதிராக எந்த சட்டமும் மத்திய அரசு கொண்டுவரவில்லை என்பது நகைப்பிற்குரியதாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மறைமுகமாக கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட கால வேலை முறையால் இந்திய நாட்டில் இனி நிரந்தர வேலையே கிடையாது என்பதை பா.ஜ.க. தலைவர் புரிந்து கொள்ளவேண்டும். நீம் என்ற பெயரில் கொண்டுவரப்படும் திட்டம் உடல் உழைப்பு தொழிலாளர்களை 40 வயதிற்கு மேல் வேலை செய்ய முடியாதவர்களாக்குகிறது.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அளிக்கப்பட்ட சங்கம் அமைப்பதற்கான சட்ட ரீதியான உரிமைகூட பா.ஜ.க. ஆட்சியில் தொழிற்சங்க சட்ட திருத்தத்தின் மூலம் பறிக்கப்படுகிறது. முழுஅடைப்பு போராட்டம் மாநில பொருளாதாரத்தை பாதிப்பதாக கூறியுள்ளார். உண்மையில் பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகளும் அமைப்பு சாரா தொழில்களும் மூடப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், நாட்டின் ஆதாரமான பொதுத்துறைகளை தனியாருக்கு விற்க கூடாது, அனைவருக்கும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தை முதல்–அமைச்சருக்கு ஆதரவானதாக, அரசியல் லாப நோக்கம் கொண்டதாக கொச்சைப்படுத்துவது கண்டனத்திற்குரியது.

இந்திய பாரம்பரிய தொழில்களையும், விவசாயத்தையும் அழித்து உள்நாட்டு–வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு ஏஜெண்டாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்தினை பொதுமக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.