மாவட்ட செய்திகள்

பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோதுவிஷவாயு தாக்கி 3 பேர் பலி + "||" + Vicious gas attack 3 killed

பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோதுவிஷவாயு தாக்கி 3 பேர் பலி

பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோதுவிஷவாயு தாக்கி 3 பேர் பலி
பன்வெல் அருகே பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை,

நவிமும்பை பன்வெல் அருகே காலுண்டே பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி ஒப்பந்ததாரர் விலாஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இந்த பணியில் அவர், சச்சின் வாக்மாரே (வயது28) உள்பட 2 பேரை ஈடுபடுத்தி இருந்தார்.

சாக்கடையை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் 2 பேரும் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. வெளியில் இருந்து கூப்பிட்டு பார்த்தும் இருவரும் சத்தம் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விலாஸ், அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக பாதாள சாக்கடைக்குள் இறங்கினார்.

3 பேரும் பலி

ஆனால் அவரும் திரும்பவில்லை. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பாதாள சாக்கடையில் இறங்கினார்கள். அப்போது, உள்ளே ஒப்பந்ததாரர் உள்பட 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

3 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதனையில் 3 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. அவர்கள் பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி பலியானது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த பன்வெல் போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.