மாவட்ட செய்திகள்

எட்டயபுரம் சந்தையில்ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை + "||" + Eightyapuram market Goats sell for Rs. 3 crore

எட்டயபுரம் சந்தையில்ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

எட்டயபுரம் சந்தையில்ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எட்டயபுரம் ஆட்டு சந்தையில் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
எட்டயபுரம், 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பஸ் நிலையம் பின்புறம் நகர பஞ்சாயத்துக்கு சொந்தமான மைதானத்தில் சனிக்கிழமைதோறும் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெறும். இங்கு எட்டயபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

எட்டயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் வருவார்கள். அரசு அதிகாரிகள் ராணுவ கேண்டீனுக்கும், தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கும் மொத்தமாக ஆடுகளை கொள்முதல் செய்து செல்வார்கள். கோவில் விழா, திருமண விழா, அரசியல் கட்சி விழா போன்றவற்றுக்கும் மொத்தமாக ஆடுகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் வாரந்தோறும் பல ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கியும், விற்றும் செல்வார்கள். இதனால் அங்கு பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை நடைபெறும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களை முன்னிட்டு, எட்டயபுரம் ஆட்டு சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை வியாபாரம் நடைபெறுவது வழக்கம்.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகளை விற்பதற்காகவும், அவற்றை வாங்குவதற்காகவும் நேற்று அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். பல ஆயிரக்கணக்கான ஆடுகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து, அவற்றை லாரிகள், லோடு ஆட்டோக்களில் ஏற்றி சென்றனர்.

எட்டயபுரம் ஆட்டு சந்தையில் நேற்று சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அவற்றில் சுமார் 6 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.