மாவட்ட செய்திகள்

புதுவை விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்து ஐ.ஆர்.பி.என். காவலர் படுகாயம்; கைவிரல் சிதைந்தது + "||" + An explosion at the Puduvai airport has hurt IRPN guards

புதுவை விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்து ஐ.ஆர்.பி.என். காவலர் படுகாயம்; கைவிரல் சிதைந்தது

புதுவை விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்து ஐ.ஆர்.பி.என். காவலர் படுகாயம்; கைவிரல் சிதைந்தது
புதுச்சேரி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியின்போது திடீரென துப்பாக்கி வெடித்து தோட்டா பாய்ந்ததில் ஐ.ஆர்.பி.என். காவலர் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்கு இருந்து தினமும் பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதையொட்டி இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி.என்.) போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு பணியில் ஈடுபடும் போலீசார் அங்கு பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் 303 ரக துப்பாக்கிகளில் தோட்டாக்களை (குண்டுகளை) நிரப்பி தயார் நிலையில் இருப்பார்கள்.

அதேபோல் பணி முடிந்து வீட்டுக்கு புறப்படும் போது துப்பாக்கியில் உள்ள தோட்டாக்களை எடுத்து விட்டு அவற்றை தனித்தனியாக அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து விட்டுச் செல்வார்கள். அடுத்து பணிக்கு வரும் போலீசார் இதேபோல் துப்பாக்கியை பயன்படுத்துவார்கள். இது வழக்கமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை ஆகும்.

கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் ஏனாமை சேர்ந்த அப்துல்லா அமீர் ஜரோஷ் என்பவர் விமான நிலைய பாதுகாப்பு பணியை மேற்கொண்டார். பொறுப்பேற்றதும் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த துப்பாக்கி கீழே சாய்ந்ததாக தெரிகிறது. கீழே விழுந்து சேதமடைந்து விடும் என கருதி அவசரமாக துப்பாக்கியை அப்துல்லா அமீர் ஜரோஷ் பிடிக்க முயன்றார். அப்போது தோட்டக்களை பாயச் செய்யும் விசையில் கை அழுத்தியதாக தெரிகிறது.

இதனால் துப்பாக்கியில் இருந்து திடீரென தோட்டா பாய்ந்தது. இதில் அவரது வலது கை விரல் சிதைந்தது. வலியால் அவர் அலறி துடித்தார். இதைப்பார்த்து அங்கு பணியில் இருந்த மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அப்துல்லா அமீர் ஜரோசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்து போலீஸ் டி.ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா, போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தாகோதண்டராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குண்டு பாய்ந்த காவலர் அப்துல்லா அமீர் ஜரோசிடம் விசாரணை நடத்தினர். புதுவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியின் போது திடீரென்று துப்பாக்கி வெடித்து தோட்டா பாய்ந்து காவலர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.