மாவட்ட செய்திகள்

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாதுஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் வலியுறுத்தல் + "||" + The Arunankadu Mines should not close the factory AITUC Secretary's assertion

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாதுஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் வலியுறுத்தல்

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாதுஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் வலியுறுத்தல்
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாது என்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் வகிதா நிஜாம் வலியுறுத்தி உள்ளார்.
ஊட்டி,

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நீலகிரி மாவட்ட மாநாடு ஊட்டியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் போஜராஜ், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பின்னர் ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய செயலாளர் வகிதா நிஜாம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் தேயிலை விவசாயத்தை நம்பி உள்ளது. கம்பெனி, சிறு, குறு தேயிலை தோட்டங்களில் 2 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. தேயிலைத்தூள் ஏலம் எடுக்கும் மையத்தில் ஒரு கிலோ தேயிலைத்தூள் ரூ.130-க்கு குறையாமல் தேயிலை ஏஜெண்ட்டுகள் ஏலம் எடுக்கும் வகையில், அரசு தேயிலை சட்டம் 1953 பிரிவு 30-ன் கீழ் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.

தேயிலை தொழிலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். கம்பெனி தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் ஒருவருக்கு தினக்கூலி ரூ.307 வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற அறிவிப்பின் படி, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி குறைவாக உள்ளதால், அவர்கள் மற்ற வேலைவாய்ப்புகளை தேடி செல்கின்றனர். இதனால் தேயிலை விவசாயம் நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே, பச்சை தேயிலைக்கு உரிய விலையும், தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்க வேண்டும். தேயிலை ஏற்றுமதி மூலம் மத்திய அரசுக்கு அந்நிய செலாவாணி கிடைக்கிறது. ஆகவே, தேயிலை தொழிலை பாதுகாக்க வேண்டும்.

ஊட்டியில் செயல்பட்டு வந்த எச்.பி.எப். தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது. இங்கு ஐ.டி. பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் சுற்றுச்சூழல் நிறைந்த மாவட்டமாக இருப்பதால், இங்கு உகந்த தொழில் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு தொழில்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இந்த குழுவின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டியூட்டில் நாய் கடி, வெறி நாய் கடிகளுக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் கூடுதலாக மருந்துகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்யக்கூடாது.

வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாது

அருவங்காட்டில் இயங்கி வரும் வெடிமருந்து தொழிற்சாலை இந்திய ராணுவத்துக்கு சொந்தமானது. அந்த தொழிற்சாலையை மூடுவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதனை மூடக்கூடாது. இந்த தொழிற்சாலை ராணுவத்துக்கு சொந்தமானது என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறவில்லை. இதற்கு காரணம் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில் உறுதியாக இருந்ததே ஆகும். தற்போது ராணுவம், பாதுகாப்பு துறைக்கு 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு செய்யும் திட்டத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டு உள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது.

ஆஷா பணியாளர்கள் என்பது சுகாதாரத்துறைக்கும், கிராம மக்களுக்கும் இடையே மருத்துவ மற்றும் சுகாதார உதவிகள் செய்பவர்கள் ஆவர். இவர்களுக்கு சம்பளம் கிடையாது. ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிகமான கிராம சுகாதார பணிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டம் வால்பாறையில் 7 மாதங்களாக ஆஷா பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை அரசின் வேறு பணிகளுக்கு செலவிடப்பட்டதாக தெரிவித்தனர். எனவே, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்.

வனப்பகுதிகளை ஒட்டியோ அல்லது யானை வழித்தடங்களிலோ தனியார் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்போது தான் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வராது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் பெள்ளி உடனிருந்தார்.