மாவட்ட செய்திகள்

மணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேர் கைது + "||" + Six people arrested in lawyer murder case

மணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேர் கைது

மணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேர் கைது
மணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டியால் இந்த கொலை சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

மணப்பாறை,

மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 33). டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய சகோதரர் ஜெகதீஷ் பாண்டி(30). வக்கீல். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டியும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், சிலம்பரசன் தரப்பினருக்கும் தொழில் போட்டி காரணமாக பிரச்சினை ஏற்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 9–ந் தேதி கரூர் மாவட்டம், அய்யர்மலை பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக சென்று விடலாம் என்று கூறியதை அடுத்து சிலம்பரசன், ஜெகதீஷ் பாண்டி, ஜெயபாண்டி, ரபீக், சவுந்தரபாண்டி, சூரியபிரகாஷ் உள்ளிட்ட 6 பேர் ஒரு காரில் அய்யர்மலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மணப்பாறை–குளித்தலை சாலையில் மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டி பாலம் அருகே சென்றபோது, அவர்களை மற்றொரு காரில் வந்தவர்கள் வழிமறித்து தாக்கியதில் வக்கீல் ஜெகதீஷ் பாண்டி உயிரிழந்தார். ஜெயபாண்டி, சிலம்பரசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.

இந்த கொலை வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காசா நகர் பகுதியை சேர்ந்த அரவிந்த்(வயது 26), வடகாட்டுப்பட்டி விராலிப்பட்டி காலனியை சேர்ந்த பாலமுருகன்(23), மதுரை மாவட்டம், வாலாந்தர் மந்தை தெருவை சேர்ந்த பிரபு(33), மேலசெம்பட்டி சிந்துப்பட்டியை சேர்ந்த தங்கமலை(34), மேலூர் நாளங்காடி தெருவை சேர்ந்த செல்வம்(44), வேடசந்தூரை சேர்ந்த விக்னேஷ்(22) ஆகிய 6 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தொழில் தொடர்பாக இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 9–ந் தேதி இந்த கொலை சம்பவம் நடந்ததுமே குற்றவாளிகளை கண்டறியும் பணியில் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த வழக்கின் விசாரணையும் தீவிரமாகவே நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொலை வழக்கு தொடர்பாக 6 பேரையும் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.