மாவட்ட செய்திகள்

கப்பலால் மோதி படகை மூழ்கடித்ததில் ஒருவர் பலி? ராமேசுவரத்தைச் சேர்ந்த 18 பேர் உள்பட 27 மீனவர்கள் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அத்துமீறல் + "||" + One person kills a boat 27 fishermen are jailed Sri Lankan navy violation

கப்பலால் மோதி படகை மூழ்கடித்ததில் ஒருவர் பலி? ராமேசுவரத்தைச் சேர்ந்த 18 பேர் உள்பட 27 மீனவர்கள் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

கப்பலால் மோதி படகை மூழ்கடித்ததில் ஒருவர் பலி? ராமேசுவரத்தைச் சேர்ந்த 18 பேர் உள்பட 27 மீனவர்கள் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அத்துமீறல்
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர். மேலும் இலங்கை கடற்படையினர் கப்பலால் மோதியதில் ஒரு மீனவர் கடலுக்குள் விழுந்து பலியானதாக கூறப்படுகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் குட்டி கப்பல்களில் ரோந்து சென்றனர்.

அப்போது மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். மேலும் ஒரு சில படகுகளில் இறங்கி மீனவர்களை தாக்கியதாகவும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தங்கச்சிமடம் ரைமண்டு என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த ரைமண்டு(வயது 29), ஜூலியன்(25), அமல்(29), சந்தியா ரிச்சர்ட்(29), டேனியல்(24), அடியாஸ்(19), நீக்ளாஸ், சக்தி(19), முனியசாமி(30), அந்தோணி பிச்சை(31), வினோத்(19) ஆகிய 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

மேலும் ராமேசுவரத்தை சேர்ந்த கருப்பையா என்பவரது படகின் மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதியதாக கூறப்படுகிறது. இதில் அந்த படகு கடலுக்குள் மூழ்கியது. இதையடுத்து அந்த படகில் இருந்த மீனவர்கள் கார்மேகம், மாரிச்சாமி, செல்வம் உள்பட 4 பேர் கடலுக்குள் விழுந்தனர். இதில் கார்மேகம் உள்பட 3 பேரை மீட்டு சிறைபிடித்தனர். ஆனால் மாரிச்சாமி கடலில் மூழ்கி மாயமாகி விட்டார். அவர் கடலில் மூழ்கி பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்பட வில்லை.

மேலும் மற்றொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ரிமோரியான், ரிமோன்சன், துரைப்பாண்டி, டெக்டர் ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

இதனிடையே ஒரு தமிழக படகை சோதனையிட்டதில் அந்த படகில் 117 கிலோ கஞ்சா இருந்ததாக இலங்கை கடற்படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 180 விசைப்படகுகளில் 1000–த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த ரெத்தினம்மாள் (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (32), விஸ்வா(23), அஜீத்(22), வினோத்(21), ஆனந்தபாபு(35), இளங்கோவன் (30)ஆகிய 6 பேரும், அதே பகுதியை சேர்ந்த ரெத்தினவேல் (47) என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகில் இவரும், செல்லத்துரை (70), முருகன் (45) ஆகிய 3 பேரும் என ஆக மொத்தம் 2 படகுகளில் 9 மீனவர்களும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 9 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது 2 விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களும் இலங்கையில் உள்ள ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நம் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் போதே அவர்கள் (இலங்கை) எல்லையில் மீன்பிடிப்பதாக கூறி, கைது செய்கின்றனர். இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். அப்போது தான் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியும். பொங்கல் பண்டிகை வர இருப்பதால் தற்போது கைது செய்த 27 மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 27 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.