மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூரில் பரபரப்பு: நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் - பிடிக்க முயன்ற போலீஸ்காரர் மீது கொலை வெறி தாக்குதல் + "||" + Furore in Thirukkovilur: Young people who were sexually abused in the middle of the night - The murderous attack on the policeman who tried to catch

திருக்கோவிலூரில் பரபரப்பு: நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் - பிடிக்க முயன்ற போலீஸ்காரர் மீது கொலை வெறி தாக்குதல்

திருக்கோவிலூரில் பரபரப்பு: நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் - பிடிக்க முயன்ற போலீஸ்காரர் மீது கொலை வெறி தாக்குதல்
நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்களை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரில் நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்களை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் பிரபு (வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு பொங்கல் பண்டிகையையொட்டி தனது நண்பர்கள் பழனி மகன் முரளி, ராஜேந்திரன் மகன்கள் அருண்குமார், அஜித்குமார் மற்றும் சந்தப்பேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார் ஆகியோருடன் மது அருந்தியதாக தெரிகிறது.

பின்னர் இரவு 11.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த சிறுமியின் தாயும், உறவுக்கார பெண்ணும் தடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த 5 வாலிபர்களும் அந்த 2 பெண்களையும் மானபங்கப்படுத்தியதோடு, திட்டி கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைதொடர்ந்து அந்த இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ்காரர்கள் பிரேம்குமார், பிரேம்நாத், குணசேகரன் ஆகியோர் விரைந்து வந்தனர். போலீசை பார்த்ததும் பிரபுவின் வீட்டுக்குள் சென்று அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரும் பதுங்கிக்கொண்டனர்.

உடனே பிரபுவின் வீட்டுக்குள் போலீசார் சென்று 5 பேரையும் பிடித்து வெளியே இழுத்து வந்தனர். அப்போது பிரபு இரும்பு கம்பியால் போலீஸ்காரர் குணசேகரனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே பிரபுவும், முரளியும் தப்பி ஓடிவிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அருண்குமார், அஜித்குமார், மற்றொரு அருண்குமார் ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தாக்குதலில் காயம் அடைந்த போலீஸ்காரர் குணசேகரன் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக பிரபு, அவரது தாய் பூங்காவனம், முரளி, அருண்குமார், அஜித்குமார், மற்றொரு அருண்குமார் ஆகிய 6 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயற்சித்ததற்காகவும், அதனை தடுத்த அவரது தாய் மற்றும் உறவினரை மானபங்கம் செய்ததற்காகவும் பிரபு, அருண்குமார், அஜித்குமார், மற்றொரு அருண்குமார் ஆகிய 4 பேர் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் கீழ் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தலையில் ரத்தக்காயங்களுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ்காரர் குணசேகரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் குணசேகரன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை தாக்கி விட்டு தப்பி ஓடிய பிரபு மற்றும் முரளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.