மாவட்ட செய்திகள்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மண், நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் + "||" + From the effects of climate change Protect the soil and water resources

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மண், நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மண், நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும்
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மண் மற்றும் நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள், மண் மற்றும் நீர்வள தொழில் நுட்பங்கள் குறித்த தேசிய அளவிலான 28-வது அறிவியல் கருத்தரங்கம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தேசிய மண்வள பாதுகாப்பு சங்க தலைவர் சுராஜ்பவன் வரவேற்றார். மண் வளம் மற்றும் நீர் ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி டாக்டர் மணிவண்ணன் கருத்தரங்கு நடத்துவதன் நோக்கம் குறித்து பேசினார். தொடர்ந்து தேசிய அளவிலான விஞ்ஞானிகள் 25 பேருக்கும், நீலகிரியின் முன்னோடி விவசாயி வாசுவுக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் விஞ்ஞானி சஞ்சய் அரோராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், விஞ்ஞானிகள் டாக்டர் மணிவண்ணன், டாக்டர் சி.பி.ரெட்டி, டாக்டர் ஆர்.கே.சாகு ஆகியோருக்கு தங்க பதக்கங்களையும் வழங்கினார். பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனைவருக்கும் காலை வணக்கம் என தமிழில் கூறி பேச்சை தொடங்கி பேசியதாவது:-

தற்போது காலநிலை மாற்றம், காலம் தவறி பெய்யும் மழை விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் பெரும் சவாலாக உள்ளது. இதனை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.இன்றைய சூழ்நிலையில் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு பற்றிய தொழில்நுட்பத்தை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மண் மற்றும் நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பு, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 94 மில்லியன் ஹெக்டேர் நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 16 மில்லியன் ஹெக்டேர் நிலம் அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. 14 மில்லியன் வறட்சியாலும், 9 மில்லியன் ஹெக்டேர் சூறாவளி காற்றாலும், 6 மில்லியன் ஹெக்டேர் உப்பு தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் 8 மில்லியன் நிலப்பரப்பு பயனற்றதாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கம், பொருளாதார வளர்ச்சி, அதிகரிக்கும் நுகர்வு விவசாயத்துக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

பருவநிலைக்கு ஏற்ப மழை பெய்யாமல் உள்ளதால் விவசாயம் பாதிக்கும் சூழல் உருவாகிறது. நிலத்தடி நீரில் 60 சதவீதம் வேளாண்மைக்கும், 40 சதவீதம் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. சொட்டு நீர்பாசனம் மூலம் அனைத்து காலங்களிலும் விவசாயம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மை குறித்து முறையாக மண் பரிசோதனை செய்து விவசாயம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக செயல்பட்டு வரும் ஆராய்ச்சி மையங்களுக்கு விவசாயிகள் நேரடியாக செல்ல வேண்டும். இந்திய மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வேளாண் உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் காலநிலை மாற்றம் குறித்த கையேட்டை கவர்னர் வெளியிட்டார். கருத்தரங்கில் முன்னாள் அணுசக்தி கழக தலைவர் சீனிவாசன், உணவு மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய பதிவாளர் அகர்வால், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, விஞ்ஞானிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய தலைவர் கோலா நன்றி கூறினார். நாளை (சனிக்கிழமை) கருத்தரங்கு நிறைவு பெறுகிறது.